10 ரூபாய் கூல்ட்ரிங்க்ஸ்.. வாயில் நுரை தள்ளி மயங்கிய சிறுமி! பிஞ்சு உயிர் போச்சே.. கதறும் பெற்றோர்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கடையில் வாங்கி குடித்த 10 ரூபாய் குளிர்பானத்தால் 6 வயது சிறுமி உயிர் இழந்ததாக கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குளிர்பானத்தை குடித்த சில நிமிடத்திலேயே சிறுமி வாயில் நுரை தள்ளி இறந்ததாக சோகம் ததும்ப கூறுகின்றனர் பெற்றோர். இதனையடுத்து செய்யாறு பகுதியில் உள்ள கடைகளில் குளிர்பான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளது.
பாரம்பரிய உணவு வகைகளை விட்டு வெகு தூரம் சென்று விட்ட மனிதன் தற்போது துரித உணவு வகைகளை நாடி வருகிறான். குறிப்பாக ஷவர்மா, நூடுல்ஸ், ஃபிரைட் ரைஸ் உள்ளிட்ட சாலையோர துரித உணவு கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

பரோட்டாவும் பல ஆண்டுகளாகவே துரித உணவு பிரியர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அன்றாட செய்திகளில் உணவு விஷமாகி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருப்பது துரித உணவு பிரியர்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
புரோட்டா சாப்பிட்ட இளைஞர் பலி, ஃபிரைட் ரைஸ் சாப்பிட்ட சிறுமி பலி, ஷவர்மா சாப்பிட்ட மாணவன் பலி, பஞ்சுமிட்டாயில் ரசாயன வேதி பொருட்கள், பானிபூரியில் கேன்சர் மூலக்கூறுகள் என அடுத்தடுத்து பல செய்திகள் வெளியாகி இருப்பது துரித உணவு பிரியர்களையும் அவற்றை சாப்பிடும் குழந்தைகளின் பெற்றோர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கடையில் வாங்கி குடித்த 10 ரூபாய் குளிர்பானத்தால் 6 வயது சிறுமி உயிர் இழந்ததாக கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெண்பாக்கம் வட்டம் கனிகிலுப்பை கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மனைவி ஜோதிலட்சுமி இருவரும் தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு ரித்தீஷ் (வயது9) என்ற மகனும் காவியா ஸ்ரீ (வயது 6) என்ற மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மகன் ரித்திஷ் நான்காம் வகுப்பும் மகள் காவியாஸ்ரீ ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் காவியாஸ்ரீ நேற்று முன்தினம் தன் வீட்டின் அருகே உள்ள பெட்டிக்கடையில் பத்து ரூபாய் குளிர்பானம் பாட்டிலை வாங்கி வந்து குடித்துள்ளார். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி மூக்கிலும் வாயிலும் நுரை வந்து மயங்கியுள்ளார். இதனை கண்ட பெற்றோர் காவியாஸ்ரீயை உடணடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜ்குமார் அளித்த தகவளின் பேரில் தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பத்து ரூபாய் மலிவு குளிர்பானம் வாங்கி குடித்ததாலேயே தன் மகள் இறந்ததாகவும், அந்த பாட்டிலில் தயாரிப்பு தேதி காலாவதி தேதிகள் எதுவும் அச்சிடப்படவில்லை என்றும் தெரிவிக்கும் ராஜ்குமார் இதுபோன்று வேறு எந்த குழந்தைக்கும் நேராத வண்ணம் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் வைக்கின்றார். இதுகுறித்து உடற்கூறு ஆய்வு முடிவு வந்த பிறகே குளிர்பானம் குடித்தால் உயிரிழந்ததா அல்லது வேறு காரணம் ஏதேனுமா என தெரியவரும். இதனிடையே செய்யாறு பகுதியில் உள்ள கடைகளில் குளிர்பான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications