புதிய சிப்காட் முதல் விதை சுத்திகரிப்பு நிலையம் வரை.. திருவண்ணாமலையில் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் ரூ.12 கோடியில் 37 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சி பலரின் கண்களை கூசச் செய்வதாக கூறிய ஸ்டாலின், தமிழ்நாட்டின் மீது வெறுப்புணர்ச்சியை பரப்பினால் அதன் மூலம் வடமாநிலங்களில் வாக்கு பெறலாம் என்று நினைக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள முதல்வர் ஸ்டாலின், உழவர் நலத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இதையடுத்து 2.66 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசுகையில், திமுக அரசின் 4 திட்டங்கள் மூலமாக ரூ.4 ஆயிரம் மிச்சமாகிறது.

திருவண்ணாமலையில் 4 லட்சத்திற்கு அதிகமான பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் உண்டாக வேண்டும் என்று பார்த்து பார்த்து ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் ரூ.12 கோடியில் 37 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
அதேபோல் கலசப்பாக்கம் மல்லிகார்ஜுனசாமி திருக்கோயிலுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். புதிதாக தொடங்கப்பட்டுள்ள செங்கம் கலை கல்லூரியில் ரூ.18.5 லட்சம் மதிப்பில் 15 புதிய கட்டடம் கட்டித் தரப்படும். அதேபோல் திருவண்ணாமலையில் விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி பலரின் கண்களை கூசச் செய்கிறது. மத்திய பாஜக அரசு நமக்கான நிதியை கொடுக்கவில்லை. தமிழக அரசுக்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே ஆளுநரை அனுப்பி வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் மீது வெறுப்புணர்ச்சியை பரப்பினால் அதன் மூலம் வடமாநிலங்களில் வாக்கு பெறலாம் என்று நினைக்கின்றனர்.
ஆனால் தமிழ்நாட்டை பற்றி இப்படி பேசுகிறார்களே என்று வடமாநில யூடியூபர்கள் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள். அவர்கள் இந்தியாவின் தெற்கு பகுதி வளமாக இருப்பதை எடுத்துக் கூற தொடங்கிவிட்டனர். ஆனாலும் தமிழ்நாட்டிற்கு எப்படியாவது அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்படும் துரோகிகள் அடிமைகளை தாண்டியே வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறோம். அதேபோல் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் இருப்பதை எல்லோரும் பாராட்டுகின்றனர். திமுகவுக்கு வாக்களிக்காத நபர்களிடமும் நல்லப் பெயரை இந்த அரசு எடுத்துள்ளது. தமிழ்நாட்டை பார்த்து பாஜக ஆதரவாளர்களே மத்திய அரசை திட்டித் தீர்க்கிறார்கள்.
பாஜக அரசு கட்டும் பாலங்கள், கட்டடங்கள் எல்லாம் சில காலத்திலேயே இடிந்துவிடுவதால் விமர்சனங்கள் எழுகிறது. தற்போது 10 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வந்த 100 நாள் வேலை திட்டத்திற்கு மொத்தமாக பாஜக மூடுவிழா நடத்தி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications