விளையாட்டு வீரர்களுக்கு அடிக்குது “ஜாக்பாட்”.. அரசு வேலை விரைவில்.. துணை முதல்வர் உதயநிதி உறுதி!
திருவண்ணாமலை: 100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப் பணி வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்தான் விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "திருவண்ணாமலையில் ரூ.10 கோடியில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படும். விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு ஓராண்டிற்குள் ஹாக்கி மைதானம் கட்டி முடிக்கப்படும்.
விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கத்திலேயே முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க உள்ளோம். 2 ஆண்டுகளில் 513 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்கியுள்ளோம். தமிழகத்தில்தான் விளையாட்டு வீரர்களுக்கு இந்த அளவு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது." எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "இந்திய ஒன்றியத்தின் சமூக நீதித் தலைநகரான தமிழ்நாட்டை, விளையாட்டுத்துறை தலைநகராகவும் உயர்த்திட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் பல எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

அதில் முதன்மையானது, 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்'. இத்திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1480 ஊராட்சி மன்றங்களுக்கு 1850 எண்ணிக்கையிலான விளையாட்டு உபகரண தொகுப்புகளை திருவண்ணாமலையில் இன்று வழங்கினோம்.
மேலும், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தின் கீழ், வழங்கப்படுகின்ற விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி நம் இளைஞர்கள் தம் விளையாட்டுத்துறை திறமைகளை வளர்த்தெடுத்துக் கொள்ள வாழ்த்தி மகிழ்ந்தோம்." எனத் தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் அரசுப் பொதுத்துறை வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில், முதற்கட்டமாக 100 பேருக்கு விரைவில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications