தலை தீபாவளி.. தாய் எழுப்பிய கேள்வி.. திருவண்ணாமலையில் திருமணமான 15 நாட்களில் உயிரை விட்ட பெண்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே இளம் பெண், திருமணமான 15 நாட்களில் தலை தீபாவளிக்கு வந்த போது, தாய் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து பெற்றோர் கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய 2 கே கிட்ஸ் குழந்தைகளில் சிலர் சிறிய சிறிய பிரச்சனைகளுக்கு எல்லாம் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். சாப்பிடும் உணவு தொடங்கி, உடை, சுற்றுலா செல்ல பணம், செல்போன், கேட்கும் நேரம் எல்லாம் செலவுக்கு பணம், கேட்ட உடன் சொகுசு பைக் எல்லா சுகங்களும் எந்த சிக்கலும் இல்லாமல் கிடைப்பதால், அவர்களுக்கு பிரச்சனை என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்கிறார்கள். சிறிய கருத்து வேறுபாடுகளை கூட தாங்கி கொள்ள மறுக்கிறார்கள்.

பெற்றோரோ, ஆசிரியரோ அல்லது நண்பர்களோ தங்களை சத்தம் போட்டால் அதை மிக அவமானமாக கருதுகிறார்கள். மதிப்பெண் குறைவாக எடுத்தால், முடி வெட்ட சொன்னால், தவறு செய்யும் போது திட்டினால் அவர்கள் உடைந்து போகிறார்கள். விட்டுக்கொடுக்கும் மனநிலையும் இருப்பது இல்லை.. எளிதில் உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்கிறார்கள். எல்லாமே நன்றாக போக வேண்டும்.. தன்னை சுற்றி எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். இதனால் ஒரு கட்டத்தில் சுயமாக வாழ வேண்டிய நிலை வரும், தவறான பாதையில் செல்வது, அவமானம் என்று கருதி, விபரீத முடிவு எடுப்பது அதிகமாக உள்ளது. அப்படித்தான் திருவண்ணாமலை அருகே நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா குண்டியாந்தாங்கல் கிராமத்தில் பெரியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் குமாா். இவரது மகள் சுவாதி (வயது 21). இவருக்கும், ஆரணி சேவூரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் கடந்த அக்டோபர் 21-ந் தேதி அன்று திருமணம் நடந்தது.
அதைத் தொடர்ந்து சுவாதி, தனது கணவருடன் தலை தீபாவளி கொண்டாட பெற்றோர் வீட்டிற்கு கடந்த 30-ந்தேதி வந்துள்ளார்.
இந்த நிலையில் தீபாவளி கொண்டாடிய நிலையில் சுவாதி, தனது தாய் வீட்டில் சில நாட்கள் தங்கிவிட்டு வருவதாக கணவரிடம் கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து ஸ்ரீதர் மனைவியை மாமியார் வீட்டிலேயே விட்டு விட்டு தனது வீட்டிற்கு சென்றார்.
இதனிடையே புதுப்பெண் சுவாதி நேற்று முன்தினம் , சேலை கட்டாமல் 'டீ-ஷர்ட்' அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட சுவாதியின் பெற்றோர், திருமணமான புதுப்பெண் இதுபோன்று 'டீ-ஷர்ட்' அணியக்கூடாது என கண்டித்தார்களாம். இதனால் மனவேதனை அடைந்த சுவாதி வீட்டில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திருமணமாகி 15 நாட்களில் சுவாதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் செய்யாறு சப் கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications