நூலிழையில் தப்பிய எடப்பாடி பழனிச்சாமி.. வரவேற்பு பேனர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.. என்ன நடந்தது?
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சாலையின் குறுக்கே வைக்கப்பட்டு இருந்த வரவேற்பு வளைவு பேனரை எடப்பாடி பழனிச்சாமியின் வாகனம் கடந்தது. அப்போது திடீரென்று அந்த வளைவு பேனர் சரிந்து சாலையில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக எடப்பாடி பழனிச்சாமி தப்பினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் எழுச்சிபயணத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி உள்ளார். தென்மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார்.
இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி இன்று திருவண்ணாமலை செங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. சாலையின் குறுக்கே வளைவு பேனர்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதனை கடந்து எடப்பாடி பழனிச்சாமியின் வாகனம் சென்று கொண்டிருந்தது.
அப்போது ஒரு இடத்தில் சாலையின் குறுக்கே இருந்த வளைவு பேனரை எடப்பாடி பழனிச்சாமியின் வாகனம் கடந்தது. அப்போது அடுத்த நொடியே அந்த பேனர் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக எடப்பாடி பழனிச்சாமியின் வாகனம் அந்த இடத்தை கடந்து சென்றுவிட்டது. இதனால் அவருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.
மாறாக எடப்பாடி பழனிச்சாமியின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த கார்கள், வாகனங்கள் முன்னோக்கி வர முடியாமல் பாதியில் நின்றது. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் விழுந்த பேனர் மற்றும் சவுக்கு கம்புகளை அப்புறப்படுத்திய பிறகு மேற்கொண்டு அந்த சாலையில் வாகனங்கள் பயணிக்க தொடங்கின.












Click it and Unblock the Notifications