திருவண்ணாமலைக்கு விரைவில் ஹேப்பி? நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் புது உத்தரவு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, மலைப்பகுதிகளிலும், நீர் நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு விரைவாக அகற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், மலைப் பகுதிகளிலும், நீர்நிலைகளிலும் ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று இன்றைய வழக்கு விசாரணையின்போது தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மிகவும் பழமை வாய்ந்த அதாவது 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட புண்ணிய தலமாகும்.. பல்வேறு சிறப்புகளை கொண்ட திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செய்ய திரண்டு வருகின்றனர்.

நல்ல செய்தி வருமா
இதற்காக தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள்.. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தாங்கள் நினைத்த வேண்டுதல் நிறைவேற்றி விட்டால், பணம், தங்கம், வெள்ளி பொருட்களை உண்டியல்களில் காணிக்கையாகவும் செலுத்திவிடுகிறார்கள்.
இந்த அளவுக்கு ஆன்மீக பெருமைகளை பெற்றுள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலானது, சுற்றுலாவிலும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.. அதிலும், இந்த கோயிலின் தாமரைக் குளம், அதன் அழகிய சூழலுக்காகவும், பக்தர்களின் புனித நீராடலுக்காகவும் பெரிதும் அறியப்படுகிறது.
எனினும், இநத் இந்த குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள், அதன் இயற்கை அழகையும், புனிதத்தன்மையையும் கடுமையாகப் பாதித்து வருகின்றன. இந்தக் குளத்தைச் சுற்றியுள்ள கட்டிடங்களில் இருந்து கழிவுகள் நேரடியாகக் குளத்தில் விடப்படுவதாகக் கூறப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.
திருவண்ணாமலை கோயில் குளம்
இப்படிப்பட்ட சூழலில், திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்கேணி உள்ளிட்ட நீர் நிலைகளையும், மலையில் உள்ள ஓடைகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை உடனடியாக அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை ஹைகோர்ட்டில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு
அந்தவகையில், இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வாதிடும்போது, "திருவண்ணாமலை மலையில் ஆக்கிரமிப்பு செய்தவர்களை அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுதாரர் யானை ராஜேந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மலைச்சரிவில் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓடைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படவில்லை" என்று புகார் தெரிவித்தார்.
தமிழக அரசுக்கு உத்தரவு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்.
சிலர் பட்டா இருப்பதாகவும் தெரிவித்துள்ளது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். மலைப்பகுதிகளிலும், நீர்நிலைகளிலும் ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications