திமுகவின் கோட்டை.. திருவண்ணாமலையில் கொடி நாட்டிய உடன்பிறப்பு.. யார் இந்த சி.என்.அண்ணாதுரை?
திருவண்ணாமலை : திருவண்ணாமலை லோக்சபா தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட சி.என்.அண்ணாதுரை சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்த லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றுள்ளது. 2004ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதிக்கு பின் தமிழ்நாட்டின் அனைத்து லோக்சபா தொகுதிகளையும் வென்ற தலைவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகியுள்ளார் மு.க.ஸ்டாலின். இதனால் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் திமுகவின் கோட்டையான திருவண்ணாமலை தொகுதியில் சி.என்.அண்ணாதுரையின் வெற்றி பலரையும் கவனிக்க வைத்துள்ளது. வழக்கமாக திருவண்ணாமலை மாவட்டம் திமுகவின் கோட்டை என்று சொல்லப்படுவதற்கு காரணம் உண்டு. 1957 லோக்சபா தேர்தலில் திமுக முதல்முறையாக வென்றது திருவண்ணாமலையில் தான். அதுதான் திமுகவுக்கு தேர்தல் களத்தில் கிடைத்த முதல் வெற்றி.
இந்த நிலையில் திமுகவின் நிறுவனரும், முன்னாள் முதலைமைச்சருமான சி.என்.அண்ணாதுரையின் பெயரை கொண்ட வேட்பாளரான சி.என்.அண்ணாதுரைக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர் ஏற்கனவே 2014 லோக்சபா தேர்தலில் திருவண்ணாமலையில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இருந்தாலும் 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வாய்ப்பை பெற்று வெற்றிபெற்றார்.
தற்போது 3வது முறையாக சி.என்.அண்ணாதுரைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பெரிய அரசியல் பின்னணியோ அல்லது பொருளாதார பின்னணியோ சி.என்.அண்ணாதுரைக்கு கிடையாது. ஆனால் அமைச்சர் எ.வ.வேலுவின் வழிகாட்டுதலின் கீழ் அரசியலில் பயணிப்பவர். அதேபோல் மக்களவையில் அதிக முறை கேள்வி எழுப்பியது, மாற்றுத்திறனாளிகளுக்கு தொகுதி வாரியாக நலத்திட்ட உதவிகளை செய்தது, ரயில் நிலையங்களின் தரத்தை மேம்படுத்தி இருக்கிறார்.
அதேபோல் எம்பியாக பணியாற்றிய காலத்தில் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். ஒப்பந்தத்தாரர் மற்றும் விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் சி.என்.அண்ணாதுரையின் மனைவி பல் மருத்துவர். பாரம்பரிய திமுகவை போல் தொண்டர்களுடன் தொண்டராக பயணிப்பதே இவரின் ஸ்டைலாக உள்ளது. இந்த லோக்சபா தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் கலியபெருமாளை விடவும் 2,33,931 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications