வீட்டுக் கடனால் நடுத் தெருவுக்கு வந்த குடும்பம்.. அர்த்த ராத்திரியில் தவித்த பிள்ளைகள்! செங்கம் ஷாக்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக குடும்பத்தோடு வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டுக்குப் பூட்டு போட்டு அராஜகத்தில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இரண்டு மாதம் தவணைப் பணம் கட்டாததால் குடும்பத்தோடு வீட்டு வாசலில் கைகட்டி நிற்க வைத்ததாகவும் புகார் கூறுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நந்திமங்கலம் பகுதியில் வசித்து வரும் அம்பிகாபதி - சுகுனு தம்பதியினருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதியினர் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பெண் பிள்ளைகளின் கல்விச் செலவிற்காக திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டை அடமானம் வைத்து கடனாக சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர். 36 மாத மொத்த தவணையில் இதுவரை 16 மாதங்கள் தவணைத் தொகை கட்டியுள்ளனர்.

திருவண்ணாமலை அராஜகம்
மாதம் 8,730 தவணைத் தொகையாக கட்டி வந்த நிலையில் குடும்பச் சூழ்நிலையால், இரண்டு தவணைத் தொகை கட்ட முடியாமல் தாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவனத்திலிருந்து பலமுறை தவணைத்தொகையை கட்டச் சொல்லி தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு நேரம் என்று கூட பார்க்காமல் வீட்டில் நான்கு பெண் பிள்ளைகள் இருந்த நேரத்தில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நிதி நிறுவன ஊழியர்கள் பணத்தைக் கட்டச் சொல்லி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
நிதி நிறுவனம்
கட்டப் பணம் இல்லாததால் நிதி நிறுவன ஊழியர்களிடம் இரவு நேரத்தில் பெண் பிள்ளைகள் முன்னாடி அசிங்கப்படுத்த வேண்டாம் தயவுசெய்து ஒரு வாரத்தில் பணம் ஏற்பாடு செய்து கட்டி விடுகிறேன் என அம்பிகாபதி கூறியதாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்க மறுத்த நிதி நிறுவன ஊழியர்கள் இரவு நேரம் என்று கூட பார்க்காமல் நான்கு பெண் பிள்ளைகளையும் அம்பிகாபதி மற்றும் அவரது மனைவி சுகுனு ஆகியோரை தகாத வார்த்தைகளால் பேசி வீட்டை விட்டு வெளியேற்றி கதவைப் பூட்டி பூட்டு போட்டுள்ளனர்.
பெண் பிள்ளைகள் அவமானம்
அப்போது பெண் பிள்ளைகள் எல்லோரும் முன்பும் அவமானப்பட்டு நிற்பதாகவும், வீட்டுச் சாவி கொடுக்கும்படி கெஞ்சிக் கேட்டுள்ளனர். அப்போது வீட்டுச் சாவியைக் கொடுக்க மறுத்த நிதி நிறுவன ஊழியர்கள் குடும்பத்தோடு கைகட்டி நிற்கும்படி நிர்ப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் வீட்டிற்கு வெளியே கைகட்டி நிற்பதைப் பார்த்து புதுப்பாளையம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
சட்ட விரோத வசூல்
தகவல் அடிப்படையில் அங்கு சென்ற புதுப்பாளையம் போலீஸார் நிதி நிறுவன ஊழியரிடம் பேசி வீட்டின் சாவியை வாங்கி வீட்டைத் திறந்துவிட்டுள்ளனர். மேலும் இரவு நேரத்தில் அத்துமீறித் தவணை வசூல் செய்வதாக வீட்டிற்குள் நுழைந்து பெண் பிள்ளைகள் உட்பட குடும்பத்தோடு வெளியேற்றிப் பூட்டுப் போட்ட நிதி நிறுவன ஊழியர் மீது போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படு நிலையில், அவர்களிடம் நாளை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வரும்படி தெரிவித்துவிட்டு காவல்துறையினர் அங்கிருந்து சென்றுவிட்டதாக அப்பகுதி பொதுமக்கள் கூறி வருகின்றனர். நிதி நிறுவனங்கள் கடன் பெற்றவர்களை அத்துமீறி நடத்தக் கூடாது என நீதிமன்றம் தெரிவித்தும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் இரவு நேரத்தில் குடும்பத்தோடு வெளியேற்றி வீட்டிற்குப் பூட்டுப் போட்டு அராஜகத்தில் ஈடுபட்ட செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications