திருவண்ணாமலை மண் சரிவு.. புதைந்த 7 பேரை மீட்பதில் மிகப்பெரிய சவாலே இதுதான்.. திணறும் மீட்புப் படை!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மண் சரிவு காரணமாக வீடு மண்ணுக்குள் புதைந்த நிலையில், அதனுள் சிக்கிய 7 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எந்த வகையில் மீட்பு பணிகளை மேற்கொண்டாலும் சிக்கல் என்பதால் பேரிடர் மீட்புப் படையினர் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிய வகை பொக்லைன் வாகனம் கூட செல்ல முடியாத குறுகிய சந்துப் பகுதியாக இருப்பது மீட்பு படையினருக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையைச் (தீபமலை) சுற்றி 40 ஆண்டுகளுக்கு மேலாக, 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு, 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையால், அண்ணாமலையார் மலையின் கிழக்கு பக்கத்தில் மண் சரிவு ஏற்பட்டது.

tiruvannamalai landslide rain

திருவண்ணாமலை வ.உ.சி நகர், 11வது தெருவின் அருகே திடீரென நேற்று மாலை, 4.45 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. மிகப்பெரிய சத்தத்துடன் பாறை ஒன்று சரிந்த நிலையில், மண் சரிந்து 3 வீடுகள் மூடப்பட்டன. அதில் 1 வீடு முழுமையாக மூடப்பட்டுள்ளது. சத்தம் கேட்டு, அப்பகுதியில் வசிப்பவர்கள் பார்த்தபோது, குடிசை வீடு ஒன்றின் மீது மண் சரிந்து காணப்பட்டது.

35 டன் எடை கொண்ட ராட்சதப் பாறை, சுமார் 20 அடி சரிந்து, வீடுகளை மூடியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்துள்ளது. மேலும், 2 வீடுகளும் மண் சரிவுக்குள் சிக்கியுள்ளன. அந்த 2 வீடுகளில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் மண்ணில் புதையாமல் தப்பியுள்ளனர்.

ஆனால், முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்த ராஜ்குமாரின் வீட்டில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் நிலை என்ன? என்பது கேள்விக்குறியாக நீடிக்கிறது. அந்த வீட்டுக்குள் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களது பிள்ளைகள் 2 பேர் மற்றும் அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

மண் சரிவு ஏற்பட்ட பிறகு ராஜ்குமார் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. எனவே, காணாமல் போன 7 பேர் மண்ணுக்குள் புதைந்துவிட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கதறி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்ததும் காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் விரைந்து சென்று பார்வையிட்டனர். மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல்துறை எஸ்.பியும் நேரில் சென்றனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு (NDRF) தகவல் கொடுக்கப்பட்டது. திண்டிவனத்தில் இருந்து துணை கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நள்ளிரவில் திருவண்ணாமலை வந்தடைந்தனர். அவர்கள் நள்ளிரவு முதல் அந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் இரவில் அவர்களால் மீட்பு பணியை தொடங்க முடியவில்லை. இன்று அதிகாலை 6 மணியளவில் மீட்புப் பணி தொடங்கப்பட்டது.

நேற்று மாலை 4.45 மணியளவில் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதைந்தன. மண் சரிவில் வீடு மண்ணுக்குள் புதைந்து, சுமார் 18 மணி நேரம் கடந்துள்ள நிலையில், மண்சரிவில் சிக்கியவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. மரங்கள், மரக்கிளைகள் ஆகியவற்றை வெட்டி அப்புறப்படுத்தியுள்ள பேரிடர் மீட்புக் குழுவினர், வீட்டை மூடியுள்ள மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மீட்புப் பணிகளில் பல சவால்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேசிபி போன்றப் பெரிய இயந்திர வாகனங்களை கொண்டு வர முடியாததால் பேரிடர் மீட்புப் படையினர் மனித உழைப்பை செலுத்தி வருகின்றனர்.

1. சுமார் 35 டன் எடை கொண்ட ராட்சத பாறை விழுந்திருப்பதால், அங்கு மண்ணை அகற்றும்போது, பாறை சரிந்து விழும் அபாயம் இருக்கிறது. அடிவாரப் பகுதியில் இன்னும் பல வீடுகள் இருப்பதால், பாறை உருண்டால் மேலும் சிக்கலாகும். எனினும், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் யாரும் இருக்க வேண்டாம் என மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

2. அப்பகுதியில் பாதைகள் குறுகலாக உள்ளன. வீடுகள் நெருக்கமாக அமைந்துள்ளன. இதன் காரணமாக ஜேசிபி, பொக்லைன், கிரேன் போன்ற கனரக இயந்திரங்கள், வாகனங்களை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, மரங்கள், பாறையை பேரிடர் மீட்புக் குழுவினரே கயிறு கட்டி இழுக்கும் நிலை உள்ளது.

tiruvannamalai landslide rain

3. பெரிய அளவிலான இயந்திரங்கள் எதையும் கொண்டு வர இயலவில்லை. மனித உழைப்பின் மூலமாகவே, மண் சரிவை அகற்ற வேண்டிய சூழல் உள்ளது. 50+ தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மண்ணை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

4. திருவண்ணாமலை பகுதியில் மழை லேசாக பெய்து வருகிறது. இதன் காரணமாக மண் இலகுவடைந்து இன்னும் மண் சரிவு ஏற்படக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இதன் காரணமாகவும், பணிகள் தாமதமடைகின்றன. இந்த மீட்புப் பணி நடந்துகொண்டிருக்கும்போதே மற்றொரு பகுதியில் பாறை ஒன்று சரிந்தது குறிப்பிடத்தக்கது.

5. சிறிய ரக பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டும், அதனை புதைந்துள்ள வீடு இருக்கும் பகுதிக்கு கொண்டு செல்ல முடியவில்லை. காரணம், அப்பகுதி, ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே செல்லும் வகையிலான குறுகலான பாதை. எனவே, இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. மனிதர்களே மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

மீட்பு பணி முடிவடைய நீண்ட நேரமாகும் எனக் கூறப்படுகிறது. மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதைந்து ஏற்கனவே 21 மணி நேரம் கடந்துள்ள நிலையில், மீட்புப் பணிக்கு நேரமாவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+