திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்.. அருணாசலேஸ்வரர் கோயில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக இன்று இயக்கம்
திருவண்ணாமலை: பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் மலைப் பாதையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் வசதிக்காக இன்று தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது.
தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான அருணாசலேஸ்வரர் கோயில் திருவண்ணாமலையில் அமைந்து உள்ளது. எல்லா நாட்களும் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களால் நிரம்பி வழியும் இந்த கோயிலில் பௌர்ணமி நாள் அன்று மாதா மாதம் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு இருக்கும் மலைப்பாதையில் கிரிவலம் செல்வது வாடிக்கை. அந்த வகையில் இந்த மாதம் பௌர்ணமி நாளை ஒட்டி இன்று பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ளனர்.

இதனை அடுத்து திருவண்ணாமலை மலைப் பாதையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் வசதிக்காக தெற்கு ரெயில்வே சார்பில் இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. இது குறித்து தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது, "விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை 9: 15 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06130) காலை 11 மணிக்கு திருவண்ணாமலை சென்று சேரும்.
அதே போன்று மறு மார்க்கத்தில் பகல் 12: 40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129) விழுப்புரத்துக்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்து சேரும். இந்த சிறப்பு ரயில்கள் தண்டரை, அண்டம்பள்ளம், ஆதிச்சனூர், திருக்கோவிலூர், ஆயந்தூர், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்." என்று கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications