மாதம் 20000 கிடைக்கும்.. இளைஞர்களுக்கு திருவண்ணாமலை கலெக்டர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
திருவண்ணாமலை: தாட்கோ மூலம் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்கள் புத்தாக்க பொறியாளர் பயிற்சி பெற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்து உள்ளார். பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப், மின்னணு உற்பத்தி நிறுவனம் போன்ற தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று மாதம் குறைந்த பட்சமாக ரூ.20 ஆயிரம் ஊதியமாக பெறலாம்.. பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியானது கணினி பொறியியல் நிபுணத்துவம், புதுமைத் திறன்களை வழங்குதல், மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறை, தானியங்கி தொழில் துறை, எந்திரவியல் மற்றும் சேர்க்கை உற்பத்தி போன்ற முக்கிய துறைகளில் பயிற்சி பெற அறிவுத் திறன்களை உள்ளடக்கிய பயிற்சி வழங்கி அதிநவீன தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் நிபுணராக உருவாக்குவதற்கான பாதையை வழிவகுப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும்.
தாட்கோ மூலம் கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற 28 இளைஞர்கள் தனியார் முன்னணி நிறுவனங்களில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்து வருகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் இப்பயிற்சியினை பெற 2022, 2023 மற்றும் 2024-ம் கல்வி ஆண்டில் ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்று 21 முதல் 25 வயது வரை உள்ளவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பயிற்சியினை பெற தகுதியுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
பயிற்சிக்கான கால அளவு 18 வாரம் ஆகும். இப்பயிற்சியானது கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஓசூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப், மின்னணு உற்பத்தி நிறுவனம் போன்ற தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று மாதம் குறைந்த பட்சமாக ரூ.20 ஆயிரம் ஊதியமாக பெறலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ ஏற்கும்" இவ்வாறு கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications