நேஷனல் லெவல் பிளான்.. திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில்.. தமிழ்நாடு போலீசின் வியூகம்.. உதவிய இன்பார்மர்
திருவண்ணாமலை கொள்ளை போல ஒரு ஏடிஎம் கொள்ளை இதற்கு முன் தமிழ்நாடு வரலாற்றில் நடந்ததே இல்லை.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தனிப்படை போலீசார் இந்த விசாரணை தொடர்பாக முக்கியமான சில தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர். பல மாதங்கள் திட்டமிட்டு, மிகவும் நுணுக்கமாக இந்த கொள்ளையை கொள்ளையர்கள் மேற்கொண்டு உள்ளனர்.
இந்த ஏடிஎம் கொள்ளையர்களை நெருங்கிவிட்டதாக போலீசார் தரப்பு தெரிவித்து உள்ளது. இன்னும் 2 - 3 நாட்களில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என்று கூறப்படுகிறது . வெறும் 2 மணி நேரத்தில் 72 லட்சம் ரூபாய் இங்கே கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. முறையாக திட்டமிட்டு இந்த கொள்ளையை அந்த கும்பல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளை
இந்த கொள்ளை தொடர்பாக ஏற்கனவே 10 பேர் விசாரணை செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்து இருந்தனர். தற்போது இவர்களை பற்றி போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாங்கள் இவர்களை கைது செய்யவில்லை. இவர்களிடம் விசாரணைதான் நடத்தி வருகிறோம். விசாரணை முடிந்து மொத்தமாக குற்றம் நிருபிக்கப்பட்ட பின் இவர்களை கைது செய்வோம். இவர்கள் சென்ற இடங்கள், அவர்களின் போன் சிக்னல் ஆகியற்றை வைத்து அவர்களுக்கு எதிராக குற்றத்தை நிரூபணம் செய்வோம் என்று போலீசார் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

10 பேர்
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது கூடுதல் தகவல்களை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த சம்பவம் தொடர்பாக 10 பேரை பிடித்து இருக்கிறோம் குஜராத்திற்கு தப்பி சென்ற 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த 6 பேருக்கு அடைக்கலம் கொடுத்த 2 பேர் கர்நாடகா மாநிலம் கேஜிஎப் பகுதியில் இருந்துள்ளனர். அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் 2 பேர் விமானம் மூலம் ஹரியானா தப்பி சென்றுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது என்று தெரிவித்து உள்ளார். இந்த 10 பேரை பிடிப்பதற்காக போலீசார் நேஷனல் லெவல் பிளான் ஒன்றை போட்டதாகவும் கூறப்படுகிறது. அதாவது தேசிய அளவில் குற்றவாளிகளை பிடிக்க மிகப்பெரிய திட்டம் ஒன்றை இவர்கள் வகுத்து உள்ளனர். முதல் கட்டமாக குற்றவாளிகள் தப்பி செல்ல வாய்ப்பு இருக்கும் ஆந்திர பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, மகாராஷ்டிராவில் மும்பை, குஜராத் ஆகிய 5 பகுதிகளை குறி வைத்து உள்ளனர். இந்த 5 பகுதிகளை லிஸ்ட் போட்டு அங்கே தனிப்படை அதிகாரிகளை அனுப்பி உள்ளனர்.

இன்பார்மர்
இதையடுத்து அங்கே இருக்கும் இன்பார்மர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளார். தனிப்படை அதிகாரிங்களிடம் இன்பார்மர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த 10 பேரையும் போலீசார் பிடித்து உள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் இந்த 10 பேரும் சொந்த வீட்டிற்கு செல்ல பிரிந்து சென்றுள்ளனர். அவர்களின் சொந்த ஊர் குஜராத், ஹரியானாவில் இருந்துள்ளது. இவர்கள் வீட்டிற்கு செல்லும் முன் போலீசார் அவர்களை பிடித்து உள்ளனர். தேசிய அளவில் போடப்பட்ட பிளான் இதில் கைகொடுத்துள்ளது. முழுக்க முழுக்க இன்பார்மர்கள் பெரிய அளவில் போலீசாருக்கு இதில் உதவி உள்ளனர்.

தொடர்பில்லை
இந்த விவகாரத்தில் தமிழர்களுக்கு கொஞ்சம் கூட தொடர்பில்லை என்று கூறப்படுகிறது. தமிழர்கள் யாரும் கொள்ளையர்களுக்கு உடந்தையாக இல்லை. கர்நாடகாவில் கேஜிஎப்பில் தமிழ்நாடு எல்லை அருகே இரண்டு பேர் இந்த கொள்ளையர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். ஆனால் இவர்களும் கூட தமிழர்கள் கிடையாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது விசாரணை நடத்தப்பட்டு வரும் குற்றவாளிகளின் தரவுகளை போலீசார் பிற மாநில போலீசிடம் கேட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து விவரங்கள் வந்த பின் போலீசார் தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு கொள்ளை
திருவண்ணாமலையில் வெறும் 4 கிமீ இடைவெளியில் இருக்கும் 4 ஏடிஎம்களை திருடி உள்ளனர். இதில் ஒன்இந்தியா ஏடிஎம் மையத்தில் ரூ.3,00,000 கொள்ளையடிக்கப்பட்டது. போளூரில்எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூ.18,00,000 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. மாரியம்மன் கோவில் தெரு எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூ.19,50,000 மற்றும் தேனிமலை எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ.32,00,000 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. 3 பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள ஏடிஎம்களில் சோதனை நடைபெற்றது. மேலும் ஒன்இந்தியா ஏடிஎம் ஒன்றிலும் கொள்ளை நடத்தப்பட்டது. ஏடிஎம் மையத்தில் அதிகாலையில் சென்று, மையத்தின் கதவை மூடிவிட்டு, கேமராவை மறைத்துவிட்டு கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications