திருவண்ணாமலை மகாதீபத்தன்று பக்தர்கள் மலை ஏறத் தடை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மகா தீபத்தன்று பக்தர்கள் மலை மீது ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையேறும் பாதை தற்போது உறுதித்தன்மை இல்லாமல் இருப்பதாகவும், கடந்த ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தளர்வான பாறைகள் இருப்பதாகவும் ஐஐடி நிபுணர்கள் அறிக்கை அளித்துள்ளதால், பக்தர்கள் பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற இருக்கும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 24ஆம் தேதி தொடங்கிய கார்த்திகை தீபத் திருவிழா, டிசம்பர் 3ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. கார்த்திகை தீபத் திருநாள் மாலையன்று 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையின் உச்சத்தில் மகா தீபம் ஏற்றப்படும்.

திருவண்ணாமலை தீபத் திருவிழா அன்று கோவிலுக்குள் சென்று மகா தீபத்தை தரிசிக்கவும், மலை மீது சென்று மகா தீபத்தை தரிசிக்கவும் ஆன்லைன் மூலமாக முன் பதிவு செய்ய வேண்டும். காலையில் ஏற்றப்படும் பரணி தீபத்தையும், மாலையில் மலை மீது ஏற்றப்படும் மகாதீபத்தையும் தரிசிப்பதற்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
கடந்த ஆண்டு மலை மீது ஏறி மகா தீபத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த ஆண்டாவது அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் திருவண்ணாமலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டது என்று ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். இதனால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் டிட்வா புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐஐடி நிபுணர்கள் குழு அறிக்கையில், மலையேறும் பாதை தற்போது உறுதித்தன்மை இல்லாமல் உள்ளது. கடந்த ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தளர்வான கல் பாறைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இந்த ஆண்டு திருவண்ணாமலை மலை மீது பக்தர்கள் ஏறுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து அறிவித்துள்ளது. அதேபோல் மாவட்ட நிட்வாகத்தின் நடவடிக்கைக்கு திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பக்தர்கள் முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல் மலையேறும் பாதையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு கண்காணிப்பதற்காக காவல் துறை, வனத்துறை மற்றும் வருவாய்த் துறைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 2வது ஆண்டாக திருவண்ணாமலை மலை மீது ஏறி பக்தர்கள் தரிசிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது பல்வேறு தரப்பினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications