ஆரணியை கலங்கடித்த 15 ஆடுகள்.. திருவண்ணாமலையில் "மர்ம உருவம்".. பார்த்ததுமே விழுந்து புரண்ட விவசாயி
திருவண்ணாமலை: ஒரே நாளில் இத்தனை ஆடுகள் எப்படி இறந்தன என்று தெரியாமல், ஆரணி விவசாயி கதறி துடித்து அழுதது காண்போரை உலுக்கிவிட்டது. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடை விவசாயிகள், முக்கிய கோரிக்கை ஒன்றை வனத்துறைக்கு விடுத்து வருகிறார்கள். என்ன நடந்தது?
தமிழகத்தில் கால்நடை விவசாயிகள் நாளுக்கு நாள், பல்வேறு துன்ப துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.. விவசாயம் சொதப்பியதால், கால்நடைகளை வைத்து பிழைப்பு நடத்தி வரும்நிலையில், இந்த கால்நடைகளையும் மர்மநபர்கள் அவ்வப்போது திருடி விடுகிறார்கள்.

ஆடுகள்: ஒரு ஆடு, தற்போது, 1000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதால், ஆடுகளை திருடும் கும்பல் அதிகரித்துவருகிறது. சிலசமயம், மேய்ச்சலுக்கு விடப்படும் நேரத்தில், விவசாயிகளை தாக்கிவிட்டு, அதற்கு பிறகு ஆடுகளை திருடி செல்கிறார்கள். இதனால், விவசாயிகள் ஆடுகள் திருட்டு குறித்து, தங்களது போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்களை தந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், ஆடுகளை மர்மவிலங்குகள் தாக்குவதும் அதிகரித்தவாறே உள்ளது.. நேற்றுமுன்தினம்கூட, சேலம் மாவட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்துகிடந்தது.
சிறுத்தை: கொளத்தூர் அருகே தின்னப்பட்டி ஊராட்சி பகுதிக்குள் கடந்த 20 நாட்களுக்கு முன்பே, இந்த சிறுத்தை ஊருக்குள் புகுந்து, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை கடித்து குதறி அட்டகாசம் செய்து வந்தது.. இதனால், பொதுமக்கள் பயந்துபோய், வீட்டைவிட்டு வெளியே வராமல் முடங்கினர்.
பிறகு, 16 கண்காணிப்பு கேமராக்கள், 3 டிரோன் கேமராக்கள் பொருத்தி தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். ஆனால், நேற்றைய தினம் அந்த சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. சிறுத்தை எப்படி இறந்தது என்று தெரியவில்லை. ஆனால், இந்த சிறுத்தையை விஷம் வைத்து கொல்லப்பட்டதாக பகீர் தகவலும் பரவி கொண்டிருக்கிறது.
பரிதாபம்: இந்த பரபரப்புக்கு நடுவே, ஆரணியிலும் மர்ம விலங்கு கடித்து குதறியதில் 15 ஆடுகள் பரிதாபமாக இறந்தன... இந்த ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றிருக்கலாம் என கிராம மக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர். ஆரணியை அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற விவசாயி 25க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
சம்பவத்தன்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு, அன்றிரவு தனது நிலத்தில் உள்ள கொட்டகையில் அடைத்து வைத்தார். மறுநாள் காலை நிலத்திற்கு சென்றபோது, கொட்டகையில் இருந்த 15க்கும் மேற்பட்ட ஆடுகள் தலை, கழுத்து என பல இடங்களில் கடித்து குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அலறி துடித்தார்.. மலைப்பகுதியையொட்டி கொட்டகை இருப்பதால் மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என்கிறார்கள்.
மர்ம விலங்கு: முள்ளண்டிரம் கிராமத்தை சுற்றி மலைப்பகுதியும், அதற்கு பக்கத்திலேயே வெட்டியாந்தொழுவம் காப்புக்காடு உள்ளதால் மர்ம விலங்குகள் அங்கிருந்து வெளியேறி கிராமத்திற்கு வந்துவிடுகிறதாம்.
இரவு, பகல் நேரங்களில்கூட, வீடுகள், நிலங்களுக்கு சென்று வர முடியாமல் உள்ளதால், வனத்துறை அதிகாரிகள் முள்ளண்டிரம் கிராமத்தில் ஆடுகளை வேட்டையாடும் மர்ம விலங்கு எதுவென கண்டறிந்து அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆரணி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications