திருவண்ணாமலை காதலி.. இப்ப தம்பதி சகிதமாக போலீசுக்கு போய்.. தேசிய விருது மணிமாறன் யாருன்னு தெரியுதா
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மணிமாறன், காதலித்து திருமணம் செய்த பெண்ணுடன், போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து பாதுகாப்பு கோரியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.. புதுமண தம்பதிகளாக காவல் நிலையத்தில் இவர்கள் தஞ்சம் புகுந்ததுடன், புகார் மனு ஒன்றையும் தந்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணையை போலீசார் நடத்தி வருவதாக தெரிகிறது. என்ன நடந்தது?
திருவண்ணாமலை தலையாம்பள்ளம் என்ற பகுதியைச் சேர்ந்த மணிமாறன், அதே பகுதியைச் சேர்ந்த பூர்ணிமாவை கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.. ஆனால், பூர்ணிமா வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.. இதனால், அவர்கள் கடலூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், அவர்கள் திருமணத்தை பதிவு துறையிலும் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை விடுத்து, புதுமண தம்பதிகள் திருவண்ணாமலை போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்துள்ளனர். அப்போது போலீசாரிடம் மணிமாறன் புகார் ஒன்றை தந்துள்ளார்.
அந்த புகாரில், "நான் கடந்த 24 வருடங்களாக சமூக சேவை செய்து வருகிறேன். தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளேன். பூர்ணிமாவை ஒன்றரை வருடங்களாக காதலித்து வருகிறேன்.
காதல் திருமணம்
கடலூரில் உள்ள ஒரு கோவிலில் பூர்ணிமாவின் முழு சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன். பிறகு, கடலூரில் உள்ள பதிவுத்துறையில் பதிவுத் திருமணம் நாங்கள் முறைப்படி செய்து கொண்டோம். தற்போது எனது மனைவியின் குடும்பத்தாரிடம் இருந்து மிரட்டல்கள் மற்றும் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் வருகிறது.. என் மனைவி பூர்ணிமாவின் குடும்பத்தினரிடமிருந்து தொடர்ந்து மிரட்டல் வருவதால், எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று புகார் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், போலீசார் மணமகளின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இளைஞர், காதல் திருமணம் செய்து கொண்டு, போலீசில் தஞ்சம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை தந்து வருகிறது.
யாரிந்த மணிமாறன் தெரியுமா?
திருவண்ணாமலை தலையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன். துணிகளை மொத்தமாக வாங்கி சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்பவர்.. ஆதரவின்றி உயிரிழப்பவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்து, அவர்களது உடல்களை நல்லடக்கம் செய்யும் நல்ல காரியத்தை விடாமல் செய்து வருகிறார். அந்தவகையில், நாடுமுழுவதும் 800-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத, ஆதரவற்ற உடல்களை அரசு மருத்துவமனைகளில் பெற்று அவரவர் மதப்படி நல்லடக்கம் செய்து இறுதிச் சடங்குகளை மணிமாறன் செய்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல, யாரும் உரிமை கோராததால் 3 பெண், ஒரு ஆண் என 4 பேரின் சடலங்கள் 6 மாதங்களுக்கும் மேலாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததுமே, அந்த 4 உடல்களையும் முறைப்படி பெற்றுக்கொண்டு, இறுதிச் சடங்குகளை முடித்து, நல்லடக்கம் செய்தவர்தான் மணிமாறன்.
மணிமாறனின் இந்த சேவையைப் பாராட்டி மத்திய அரசு கடந்த 2015 டிசம்பரில் சிறந்த சமூக சேவகருக்கான தேசிய விருதையும், தமிழக அரசு சிறந்த இளைஞருக்கான விருதையும் வழங்கியுள்ளன. அதேபோல, 2012-ல் குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு விருதை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் இருந்து பெற்றுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்களில் 4 கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றவர் இந்த மணிமாறன் என்பது கவனிக்கத்தக் விஷயமாகும்.












Click it and Unblock the Notifications