திருவண்ணாமலை கோயில் அன்னதானம்.. அதிக விலைக்கு வாங்கப்படும் சிலிண்டர்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஒரு நிறுவனம் சார்பில் அன்னதானம் சமைப்பதற்கு சிலிண்டர் ஒன்று ரூ.1,830க்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் வேறு ஒரு நிறுவனத்திடம் தலா ரூ.1,950 வீதம் எரிவாயு சிலிண்டர் வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பக்தர்களுக்கான அன்னதானம் தயாரிக்க குறைந்த விலையில் சிலிண்டர்கள் கிடைக்கும் போது, அதிக விலைக்கு வாங்குவது ஏன்? என இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஶ்ரீ லட்சுமி எச்.பி ஏஜென்சிஸ் எனும் எரிவாயு சிலிண்டர் முகமை நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் ஶ்ரீ லட்சுமி எச்.பி ஏஜென்சிஸ் கூறுகையில், "தமிழகத்தின் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயில் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

கோயிலில் அன்னதானம், பிரசாதம் தயாரிப்பதற்காக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் மடப்பள்ளி சார்பில் எங்கள் முகமையிடம் (ஶ்ரீ லட்சுமி எச்.பி ஏஜென்சிஸ்) வணிகப்பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்கள் வாங்கப்பட்டு வந்தது. குறைந்த விலையில் நாங்கள் எரிவாயு சிலிண்டர் வழங்கி வந்தோம். ஆனால் எங்களிடம் சிலிண்டர்கள் கொள்முதல் செய்வதை கோயில் நிர்வாகம் திடீரென நிறுத்தி விட்டது.
வேறு இடத்தில் சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்தும்படி அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக எங்களுக்கு தெரியவந்தது. தன்னிச்சையான இந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் எங்களிடமே எரிவாயு சிலிண்டர் வாங்க உத்தரவிட வேண்டும்," எனக் கூறியருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், "புதிய விதிகளின் படி அசல் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சிலிண்டர்கள் வாங்க எந்த ஒரு ஒப்பந்தமும் போடப்படவில்லை. சேவை குறைபாடு காரணமாக வேறு நிறுவனத்திடம் வாங்க முடிவு செய்யப்பட்டது," என வாதிட்டார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், "ரூ.1,900க்கு விற்கப்படும் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் கோயிலுக்கு வழங்கப்படுவதால் ஶ்ரீ லட்சுமி எச்.பி ஏஜென்சிஸ் சார்பில் சிலிண்டர் ஒன்று ரூ.1,830க்கு தரப்பட்டது. ஆனால், இப்போது ஶ்ரீ லட்சுமி எச்.பி ஏஜென்சியில் எரிவாயு சிலிண்டர் வாங்கப்படுவதில்லை.
இப்போது வேறு ஒரு நிறுவனத்திடம் தலா ரூ.1,950 வீதம் எரிவாயு சிலிண்டர் வாங்கப்படுகிறது. நாங்கள் கொடுத்த விலையை விடவும் கூடுதலாக ரூ.120க்கு எரிவாயு சிலிண்டர்கள் வாங்கப்படுகின்றன. கூடுதல் விலைக்கு சிலிண்டர்கள் வாங்கப்படுகிறது என ஆர்டிஐ தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, குறைந்த விலைக்கு எனது கட்சிக்காரரிடம் சிலிண்டர் வாங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்," என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு கருத்துத் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி, "பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது நாள் முழுவதும் தடையின்றி நடைபெற வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், எரிவாயு சிலிண்டர்களை கூடுதல் விலைக்கு வாங்கி கோயில் நிதியை விரயம் செய்ய கூடாது. சேவை குறையாடு இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தெரிவித்து தீர்வு கண்டிருக்கலாம். அதை விடுத்து அதிக விலை கொடுத்து எரிவாயு சிலிண்டர்கள் வாங்கியது ஏன்? என இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க வேண்டும்," என உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 13ஆம் தேதிக்கு நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications