"எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவுக்குள்ளேயே பலர் வேலை செய்கின்றனர்” - உதயநிதி அட்டாக்!
திருவண்ணாமலை: எடப்பாடி பழனிசாமியை எப்படி தோற்கடிப்பது என அதிமுகவிற்குள் பலர் வேலை பார்த்து வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அமித்ஷாவின் காலடியில் யார் முதலில் விழுவது என்று அதிமுக அணிக்குள் மிகப்பெரிய போட்டியே நிலவி வருகிறது என்றும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலை திறக்கும் நிகழ்ச்சி, அமைச்சர் எ.வ.வேலு, எம்.பி தரணிவேந்தன் ஆகியோர் தலைமையில் ஆரணியில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, கருணாநிதி உருவச் சிலையை திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அதிமுகவை யார் கைப்பற்றுவது என்பது அவர்களுக்குள்ளேயே போட்டியாக உள்ளது. எடப்பாடி பழனிசாமியை எப்படி தோற்கடிப்பது என்று அதிமுக அணிக்குள்ளேயே வேலை பார்த்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் செய்துள்ளார்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் காலடியில் யார் முதலில் விழுவது என்று அதிமுக அணிக்குள் மிகப்பெரிய போட்டியே நிலவி வருகிறது. பாசிச பாஜகவையும், அடிமை அதிமுகவையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். வெறுப்பு அரசியல் மட்டுமே செய்யும் பாஜக - அதிமுக கூட்டணி அமைந்து 8 மாதமான நிலையில், அந்த கூட்டணியை நம்பி இதுவரை எந்த கட்சியும் போகவில்லை. அதிமுகவில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் விலகி ஓடுகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பிரச்சாரத்திற்கு செல்வதாக கூறி பேருந்தை எடுத்துக்கொண்டு கிளம்பினார். ஒவ்வொரு தொகுதியாகச் சென்று பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், தேனி பக்கம் சென்றால் ஓ.பன்னீர்செல்வம் திட்டுவார், கோபிசெட்டிபாளையம் சென்றால் செங்கோட்டையன் திட்டுவார், டெல்டா மாவட்டம் சென்றால் டிடிவி தினகரன் திட்டுவார் என்றே எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஒரு விஷயத்தில் மட்டும்தான் அதிமுகவிற்குள் ஒற்றுமை உள்ளனர். அமித்ஷாவை அதிகமாக பாராட்டி பேசுவது மட்டுமே அதிமுகவில் உள்ள ஒற்றுமை. சொந்த கட்சியினரை திட்டி, அமித்ஷாவின் காலை பிடித்துக்கொண்டு புகழ்கின்றனர். வெறுப்பைப் பரப்பும் பாசிச சக்திகளிடமிருந்து தமிழ் மண்ணைக் காப்போம்" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications