வாரம் முழுவதும் ஓய்வில்லாமல் உழைத்தாலும் களைப்பு வராதது ஏன்? சீக்ரெட் ஆஃப் ஸ்டாலின் எனர்ஜி!
திருவண்ணாமலை: நாள் முழுவதும், வாரம் முழுவதும் ஓய்வில்லாமல் உழைத்தாலும், தனக்கு களைப்பு வராமல் இருப்பதற்கான காரணம் பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் மனம் திறந்துள்ளார்.
"சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி'' என்று தனது ஆற்றலுக்கும், சுறுசுறுப்புக்குமான பின்னணி குறித்து அவரே விவரித்துள்ளார். இது பற்றி திருவண்ணாமலையில் நடைபெற்ற வடக்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;

புது எனர்ஜி: ''ஒரு நாள் முழுவதும் - ஒரு வாரம் முழுவதும் - ஓய்வில்லாமல் உழைத்தாலும், அடுத்த நாள் கழக உடன்பிறப்புகளின் இருக்கப்போகிறோம் என்ற எண்ணம் வந்துவிட்டாலே புதிதாக ஒரு எனர்ஜி வந்துவிடும். ஏன் என்றால், நீங்கள்தான் "சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி". திருவண்ணாமலையும் தீபமும் போலதான், திருவண்ணாமலையும் தி.மு.க.வும். யாராலும் பிரிக்க முடியாது. பல்வேறு வரலாற்றை நம்முடைய பொதுச் செயலாளர் அவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஒன்று, இரண்டை மட்டும் உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.''
1,451 ரூபாய் வசூல்: ''நம்முடைய கழகம் உருவான அன்று நடந்த முதல் பொதுக்கூட்டத்தில் 1,451 ரூபாய் வசூலானது. அதில் 100 ரூபாய் திருவண்ணாமலையை சேர்ந்த நம்முடைய அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ப.உ.சண்முகம் வழங்கியது. 1957 தேர்தலில் நாம் முதன்முதலாக போட்டியிட்டு 15 பேர் வெற்றி பெற்றோம். அதில், 3 பேர் இந்த மாவட்டத்துக்காரர்கள்.''
பழைய வரலாறு: ''முதல் நாடாளுமன்றத் தேர்தலில் 2 பேர் வெற்றி பெற்றார்கள். அதில் ஒன்று, இந்த திருவண்ணாமலை தொகுதி! சட்டமன்றத்துக்கு, ப.உ.சண்முகம், பி.எஸ்.சந்தானம், களம்பூர் அண்ணாமலை, நாடாளுமன்றத்திற்கு, இரா.தர்மலிங்கம். இன்றைக்கும் இவர்கள் பெயரை வரலாறு சொல்லிக் கொண்டு இருக்கிறது. அப்படிப்பட்ட நம்முடைய ப.உ.ச. அவர்களுக்கும் இரா.தர்மலிங்கம் அவர்களுக்கும் கொஞ்சம் நாட்களுக்கு முன்புதான் நம்முடைய வேலு முயற்சியில் மாவட்டக் கழகம் நூற்றாண்டு விழா கொண்டாடியது.''
திருப்புமுனை தந்த திருவண்ணாமலை: ''அண்ணன் துரைமுருகன் சொன்னதுபோல, 1963-இல் தி.மு.க.விற்கு திருப்புமுனை தந்தது திருவண்ணாமலை இடைத்தேர்தல். அப்போது ஆளுங்கட்சி, காங்கிரஸ், நம்முடைய வேட்பாளர், ப.உ. சண்முகம், தேர்தல் பொறுப்பாளர் தலைவர் கலைஞர். அன்றைக்கு திருவண்ணாமலை கொடுத்த வெற்றிதான், 1967-இல் நாம் ஆட்சி அமைக்க அடித்தளமாக அமைந்தது.''












Click it and Unblock the Notifications