ஆன்லைன் வகுப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பிய இளைஞர்.. மாணவிகள், ஆசிரியைகள் அதிர்ச்சி!
திருவாரூர்: ஆன்லைன் வகுப்பின்போது பள்ளி மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் கொரோனா காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக மூடியே கிடக்கின்றன.
கடந்த ஓராண்டிற்கு மேலாக ஆன்லைன் மூலமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆன்லைன் வகுப்புகள்
இந்த சம்பவங்கள் தொடர்பாக பல முக்கிய பள்ளிகளின் தாளாளர்கள், ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் திருவாரூர் மாவட்டத்திலும் அரங்கேறி உள்ளது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு வகுப்பு வாரியாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆபாச மெசேஜ் அனுப்பினார்
இந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. இதனிடையே அந்த ஆன்லைன் வகுப்புகளில் போலியாக மாணவி பெயரில் கிருஷ்ணகிரி மாவட்டம் வீராச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய மோகன்குமார் என்கிற இளைஞர் இணைந்துள்ளார். அவர் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவிகளுக்கும் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆபாச மெசேஜ் மற்றும் படங்களையும் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.

களமிறங்கிய சைபர் கிரைம்
இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் கடந்த 29-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் நேரடியாக புகார்அளித்துள்ளது. புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மூலமாக மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மர்ம நபர் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மாணவிகளுக்கு ஆபாச மெஜேஜ்
அனுப்பியவர் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அடுத்த வீராச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகனான மோகன்குமார்(26) என்பது கண்டறியப்பட்டது.

போலீசார் எச்சரிக்கை
இதனை தொடர்ந்து மோகன்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தண்டனை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர். இதுபோன்று குற்றச் செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications