60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதயாத்திரையாக திருப்பதிக்கு வர வேண்டாம்! திருமலை திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி: திருப்பதி மலையில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதயாத்திரையாக வர வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பண்டிகை, பிரம்மோற்சவம், விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கானோரும் வருகை தருகிறார்கள். திருப்பதியில் ஆர்ஜித சேவை, ரூ 300 விரைவு தரிசனம், இலவச தரிசனம், திவ்ய தரிசனம் எனப்படும் நடைபாதை தரிசனம் ஆகியவை உள்ளன.

இதில் நடைபாதை தரிசனத்தில் அலிபிரி மலை பாதை வழியாகவும் ஸ்ரீவாரி மெட்டு பாதை வழியாகவும் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள். இந்த நிலையில் மலைபாதை வழியாக தரிசனத்திற்கு வரும் பொதுமக்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுரை வழங்கியுள்ளது.
இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வலிப்பு, மூட்டு பிரச்சனைகள் உடையவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரை மூலம் வர வேண்டாம்.
மலையில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும் என்பதால், உடல் பருமனாக உள்ளவர்கள் மற்றும் இதய நோய்க்காரர்கள் மலைப்பாதையில் நடந்து செல்வது நல்லதல்ல. ஆகவே அவர்கள் வாகனங்களில் வந்து தரிசனம் செய்யலாம். பாத யாத்திரிகையாக வருவோருக்காக அலிபிரி மலைப்பாதையில் 1500-வது படி மற்றும் காலி கோபுரம், பாஷ்யகர்லா சன்னதி அருகே மருத்துவ உதவி மையம் உள்ளது.
திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவ உதவி பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications