தென் கொரியா, ஜப்பான் செய்த தவறை நாம் செய்துவிடக்கூடாது.. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு
திருப்பதி: அண்மைக் காலமாக குழந்தை பெற்றுக் கொள்வதை சில தம்பதியர் வெறுக்கிறார்கள். ஏனெனில் தாங்கள் தனித்தனியாக சம்பாதிக்கும் பணத்தை பகிர்ந்து கொள்ள அவர்கள் விரும்பவில்லை. ஆனால் உங்கள் பெற்றோர் இப்படி நினைத்திருந்தால் நீங்கள் இந்த உலகுக்கு வந்திருக்க முடியுமா? ஒருகாலத்தில் குழந்தையின்மை என்பது இழிவாக பார்க்கப்பட்டது. எனவே இந்த விவகாரத்தில் ஒவ்வொரு குடும்பமும் முடிவு செய்ய வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி என்பது 0.92 சதவீதமாக இருக்கிறது. அதேநேரம் பீகார் (1.98 சதவீதம்), உத்தரபிரதேசம் (1.70 சதவீதம்), மேகாலயா (1.5 சதவீதம்) , மத்திய பிரதேசம் (1.49 சதவீதம்) ஆகிய மாநிலங்களில் தேசிய சராசரியை விட மக்கள் தொகை வளர்ச்சி அதிகமாக உள்ளது. ஆனால் மகாராஷ்டிராவில் 0.71 சதவீதமும், மேற்கு வங்காளத்தில் 0.78 சதவீதமும் கணிக்கப்பட்டிருக்கிறது. இது தேசிய சராசரியை விட குறைவு ஆகும். வட இந்தியா நிலவரம் இப்படி என்றால், தென் மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி கடும் சரிவினை சந்தித்துள்ளது. தென்மாநிலங்களில் பிறப்பு விகிதம் தேசிய சராசரியை விட மிக குறைவாக இருக்கிறது.

கேரளாவில் மக்கள் தொகை 0.22 சதவீதமும் ஆந்திராவில் 0.61 சதவீதமும், கர்நாடகாவில் 0.68 சதவீதமும், தெலுங்கானாவில் 0.74 சதவீதமாகவும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வெறும் 0.30 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை வளர்ச்சி இருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவிலுமே மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது.
இந்நிலையில் தென் மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கவலையை வெளிப்படுத்தி உள்ளார். கடந்த ஆண்டு இதுபற்றி கூறும் போது, தென்மாநிலங்களில் குறைந்தது பெண்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தை மீண்டும் சந்திரபாபு நாயுடு சுட்டிக்காட்டி பேசினார். சித்தூர் மாவட்டத்தில் உள்ள தனது குப்பம் தொகுதியில் நேற்று சிறப்பு திட்டம் ஒன்றை தொடங்கி வைத்து பேசும் போது, "தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் செய்த தவறை நாம் செய்துவிடக்கூடாது. தென்கொரியாவில் பிறப்பு விகிதம் 0.9 சதவீதமாக சரிந்திருக்கிறது. ஜப்பானிலும் இதைவிட பெரிய பிரச்சினைகள் உள்ளன. குப்பத்திலும் கூட பிறப்பு விகிதம் 1.5 ஆக உள்ளது. இது 2-க்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் வேகமாக குறைந்து வருகிறது.
அண்மைக் காலமாக குழந்தை பெற்றுக்கொள்வதை சில தம்பதியர் வெறுக்கிறார்கள். ஏனெனில் தாங்கள் தனித்தனியாக சம்பாதிக்கும் பணத்தை பகிர்ந்து கொள்ள அவர்கள் விரும்பவில்லை. ஆனால் உங்கள் பெற்றோர் இப்படி நினைத்திருந்தால் நீங்கள் இந்த உலகுக்கு வந்திருக்க முடியுமா? ஒருகாலத்தில் குழந்தையின்மை என்பது இழிவாக பார்க்கப்பட்டது. எனவே இந்த விவகாரத்தில் ஒவ்வொரு குடும்பமும் முடிவு செய்ய வேண்டும்" என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.












Click it and Unblock the Notifications