திருப்பதியில் கோலாகலமாக தொடங்கிய பிரம்மோற்சவம்.. ரூ. 13.45 கோடியில் அதிநவீன சமையல் கூடம் திறப்பு
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாகத் தொடங்கியுள்ள நிலையில், ரூ. 13.45 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாத்ரு ஸ்ரீ வகுலமாதா அதிநவீன சமையல் கூடத்தை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்துள்ளார்.
திருமலை திருப்பதியில் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து வழிபடுகின்றனர். பண்டிகைக் காலங்களில், விடுமுறைக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பிரம்மோற்சவம் தொடங்கியுள்ளதால் வண்ண விளக்குகள், தோரணங்களால் ஜொலிக்கிறது.

அக்டோபர் 12 ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறவுள்ளது. பிரம்மோற்சவ கொடியேற்றத்தை தொடர்ந்து ஆந்திர அரசு சார்பில் அம்மாநில முல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதி சமேதராக பட்டு வஸ்திரத்தை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கினார். முதல்வருக்கு தேவஸ்தான அர்ச்சகர்கள் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர். பின்னர், ஏழுமலையானை தரிசனம் செய்து 2025 ஆண்டுக்கான தேவஸ்தான காலண்டர்கள், டைரிகளை வெளியிட்டார்.
கோயிலில் நடைபெற்ற பெரிய சேஷ வாகன சேவையிலும் முதல்வர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளினார். மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மாட வீதிகளில் வாகன சேவையை கண்டுகளித்தனர். பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளையொட்டி 16 மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, அன்று இரவு அன்ன வாகனத்தில் உற்சவர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதைத்தொடர்ந்து, ரூ. 13.45 கோடி செலவில் கட்டப்பட்ட அதிநவீன சமையல் கூடம் திறந்து வைக்கப்பட்டது. திருமலை பாஞ்ச சன்யம் விடுதி அருகே திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ. 13.45 கோடி செலவில் மாத்ரு ஸ்ரீ வகுலமாதா அதிநவீன சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளது. இந்த சமையல் கூடத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மனைவி கார் மூலமாக ரேணிகுண்டா விமான நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து விஜயவாடாவிற்கு விமானம் மூலம் சென்றனர்.












Click it and Unblock the Notifications