திருப்பதிக்கு நேரில் சென்று பாவமன்னிப்பு கேட்க பவன் கல்யாண் முடிவு.. 11 நாள் விரதத்துடன் புது சபதம்
திருப்பதி: திருப்பதி லட்டு பிரசாத விவகாரத்தில் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி, பதினோரு நாட்கள் நோன்பு நோற்பதாக சபதம் எடுத்து வருகிறேன். பதினோரு நாள் பரிகார தீட்சையின் பிற்பகுதியில் அக்டோபர் 1, 2 தேதிகளில் திருப்பதி சென்று இறைவனை நேரில் தரிசனம் செய்து பாவமன்னிப்புக் கோரி இறைவன் முன் எனது பரிகார தீட்சை நிறைவு செய்ய போகிறேன் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.
ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில் திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைத்த குற்றச்சாட்டு தேசிய அளவில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

கடந்த செப்டம்பர் 18ம் தேதி ஆந்திர மாநிலம் அமராவதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, "ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்த கடந்த 5 ஆண்டுகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திருப்பதி திருமலையின் புனிதத்தையே முற்றிலுமாக கெடுத்து விட்டார்கள். அன்னதானத்தின் தரத்தில் சமரசம் செய்தும், புனிதமான திருமலை லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியும் மாசுபடுத்தி உள்ளார்கள். எனினும், நாங்கள் (புதிய அரசு) இப்போது திருப்பதியில் மிக தூய நெய்யை பயன்படுத்துகிறோம். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தைப் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுகிறோம்" என்று தெரிவித்தார்
இந்த விவாகரம் நாடு முழுவதும் சர்ச்சையான நிலையில், ஆந்திர துணை முதல்வர் பவன் கலயாண் வெளியிட்ட பதிவில், இனி நாடு முழுவதும் உள்ள கோவில்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க அதற்காக தனியே கமிட்டி ஒன்று அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதாவது "சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்" என்ற ஒன்றை நாம் உடனடியாக துவங்க வேண்டும். சனாதன தர்மத்தை இழிவு படுத்தும் வகையில் நடக்கும் இந்த விஷயங்களை முடிவு கட்ட நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த நடிகர் பிரகாஷ் ராஜ், "மாண்புமிகு துணை முதல்வர் பவன் கல்யாண் அவர்களே.. இந்த விஷயம் உங்களுடைய ஆட்சி காலத்தில் தான் நடந்துள்ளது. ஏற்கனவே நாட்டுக்குள் பல சிக்கல்கள் இருக்கும் நிலையில் நீங்கள் புதிய பிரச்சினைகளை இங்கு கொண்டு வராதீர்கள். முதலில் இந்த செயலை செய்தது யார் என்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் பணியில் உங்கள் சிந்தனை இருக்கட்டும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் துணை முதல்வர் பவன் கல்யாண் இன்று மீண்டும் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "நம்முடைய கலாச்சாரம், நம்பிக்கை, நம்பிக்கை மற்றும் பக்தி ஆகியவற்றின் மையமான ஸ்ரீ திருப்பதி பாலாஜி தாமின் பிரசாதத்தில் அசுத்தத்தை புகுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தீய முயற்சிகளால் தனிப்பட்ட முறையில் நான் மிகவும் வேதனையடைந்தேன்.
மேலும் இந்த விஷயத்தில் உண்மையைச் சொல்வதென்றால், நான் மிகவும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன். வெங்கடேஸ்வரப் பெருமாள் கடவுளின் அருளால் நமக்கும், சனாதனிகள் அனைவருக்கும் இந்த துக்கமான தருணத்தில் நல்ல மன வலிமை தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இப்பொழுதே இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி, பதினோரு நாட்கள் நோன்பு நோற்பதாக சபதம் எடுத்து வருகிறேன். பதினோரு நாள் பரிகார தீட்சையின் பிற்பகுதியில் அக்டோபர் 1, 2 தேதிகளில் திருப்பதி சென்று இறைவனை நேரில் தரிசனம் செய்து பாவமன்னிப்புக் கோரி இறைவன் முன் எனது பரிகார தீட்சை நிறைவு செய்ய போகிறேன்" இவ்வாறு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications