முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் மாரடைப்பால் காலமானார்.. மகனின் திருமண நிகழ்ச்சியில் சோகம்
திருப்பதி: முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) திருப்பதியில் மாரடைப்பால் இன்று காலமானார்.
திருப்பதியில் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அங்கேயே அவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ், அதிமுக பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் இருந்தார். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் அவர் திமுகவில் இணைந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் கோவை செல்வராஜ் பேசும் போது, நான் கடந்த 1972-ல் அ.தி.மு.க.வில் இணைந்து கட்சிக்காக கடுமையாக உழைத்து வந்தேன். கோவையில் அரங்கநாதன் என்பவர் எம்.எல்.ஏ. தேர்தலில் நின்றபோது அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்திருந்தேன். அப்போது எதிர்கட்சிகள் என்னை தாக்கி மண்டையை உடைத்தனர்.
இதையடுத்து அரங்கநாதன் என்னை எம்.ஜி.ஆரை சந்திக்க அழைத்து சென்றுள்ளார். அப்போது எனக்கு 16 வயது தான். முதல் முறையாக எம்.ஜி.ஆரை சந்தித்ததும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். இதையடுத்து கடந்த 1984-ம் ஆண்டு எம்.எல்.ஏ. சீட் கேட்டேன். ஆனால் அங்கு மறுக்கப்பட்டது. இதனால் நான் காங்கிரசில் சேர்ந்து எம்.எல்.ஏ. ஆனேன். அப்போது ஒருமுறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னை நேரில் அழைத்து பேசினார். இதனை தொடர்ந்து நான் மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தேன். தொடர்ந்து கட்சிக்காக பணியாற்றி வந்தேன்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்ட போது, நான் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருந்தேன். இதுவரை அவருக்கு விசுவாசமாகவே இருந்து வந்தேன்.இந்த நிலையில் தான் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகச்சாமி ஆணைய விசாரணை அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அந்த அறிக்கையில், வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தால் ஜெயலலிதா உயிர் பிழைத்திருப்பார் என்ற தகவல் தெரியவந்தது.
அதிமுக ஆட்சியில் இருந்த அந்த காலக்கட்டத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் நினைத்திருந்தால் ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் அவர்கள் அனைவரும் ஜெயலலிதா உயிரை விட தங்கள் பதவியே முக்கியம் என நினைத்து செயல்பட்டிருக்கிறார்கள். இப்படிபட்டவர்களுடன் இதுவரை நான் எப்படி இணைந்து பணியாற்ற முடியும். எனவே இவர்களோடு இனியும் பணியாற்ற விரும்பவில்லை. அதன் காரணமாகவே ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து மட்டுமில்லை. அ.தி.மு.க.வில் இருந்தே விலகுகிறேன்" என்றார். அதன்பின்னர் திமுகவில் இணைந்தார். திமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்து வந்த கோவை செல்வராஜ், திருப்பதியில் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் காலமானார். அவரது உடல் நாளை கோவை கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என்று உறவினர்கள் அறிவித்துள்ளனர். கோவை செல்வராஜ் மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications