'அய்யோ.. மேலே பாரு மச்சி' சொல்லி முடிக்கும் முன்பே நடந்த அதிர்ச்சி.. சென்னை இளைஞர்களுக்கு விபரீதம்
திருப்பதி: திருப்பதி நாகலாபுரம் நீர் வீழ்ச்சியில் குளிக்க சென்று மாயமான சென்னை இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அபாயகரமான நீர் வீழ்ச்சியில் உல்லாச பயணம் மேற்கொண்டிருந்த போது விபரீதமாகி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே நாகலாபுரம் பூபதியேஸ்வர கோனே அருவி அமைந்துள்ளது. சென்னையில் இருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தில் அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள இந்த அருவியில் குளிக்க, சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் செல்வார்கள். வார இறுதி நாட்களில் சென்னைவாசிகள் குவியும் இடமாக உள்ளது.

தற்போது கோடை வெயில் சென்னையில் கொளுத்தி வரும் நிலையில் பலரும் நாகலாபுரம் அருவிக்கு செல்கிறார்கள். டிரெக்கிங் பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான இடமாக இருக்கிறது இந்த நாகலாபுரம் பூபதியேஸ்வர கோனே அருவி. ஏனெனில் அருவிக்கு செல்ல வேண்டும் என்றால் நாகலாபுரத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.
இங்கு சென்னையைச் சேர்ந்தவர்கள் நண்பர்களுடன் கூட்டம் கூட்டமாக சென்று குளித்து மகிழ்வார்கள். ஆனால் இந்த அருவியில் ஆபத்தும் அதிகமாகவே உள்ளது. ஏனெனில் இந்த நீர் வீழ்ச்சியில் விழுந்து பலரும் உயிரிழந்துள்ளனர். இதனால் எச்சரிக்கையாக குளிக்க வேண்டும் என்றும், நீச்சல் தெரியாதவர்கள் உள்ளே இறங்குவது ஆபத்து என்றும், நீச்சல் தெரிந்தவர்களுக்கு அதிவேகத்தில் செல்லும் இந்த அருவி நீரில் கவனமாகவே குளிக்க வேண்டும் என்பதும் அறிவுரையாகும்.
இந்நிலையில் சென்னையில் இருந்து இளைஞர்கள் நவீன், மாதவன், கார்த்திக் பிரசாத் உள்பட 5 பேர் அருவிக்குச் சென்றுள்ளனர். அவர்கள், அங்குள்ள பாறையில் ஏறி தண்ணீரில் குதித்துள்ளனர். அவர்கள் நீண்ட நேரமாக குளித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது பாறையில் இருந்து நீரில் குதித்து விளையாடிய போது தவறி ஆழமான பகுதிக்குள் விழுந்துவிட்டனர்.

நீண்ட நேரமாகியும் மாதவன், நவீன், கார்த்திக் பிரசாத் ஆகிய 3 பேர் நீரில் இருந்து வெளியே வராததால் சக நண்பர்கள் இரண்டு பேரும் பதற்றம் அடைந்தனர். பின்னர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து நாகலாபுரம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் அருவிக்கு வந்தனர். அங்கு தண்ணீரில் மூழ்கிய மாதவன், நவீன், கார்த்திக் பிரசாத் ஆகியோரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 3 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். நாகலாபுரம் அருவியில் தற்காலிகமாக பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலங்களில் அருவிகள் உள்ளிட்ட நீர் வீழ்ச்சிக்கு செல்லும் இளைஞர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்காவிட்டால் இது போன்ற விபரீதங்கள் நிகழும் என்பதற்கான எச்சரிக்கையாகவே இதனை பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications