"கடவுளை வைத்து அரசியல் செய்கிறார்கள்!" திருப்பதி லட்டு மாட்டு கொழுப்பு சர்ச்சை- ஜெகன்மோகன் பரபர
திருப்பதி: திருப்பதியில் வழங்கப்படும் லட்டினை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருந்ததாக தெலுங்கு தேசம் கட்சி பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என்றும் கடவுளை வைத்து அரசியல் செய்யப் பார்ப்பதாகவும் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பதிலளித்துள்ளார்.
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். அவர்களுக்குப் பிரசாதமாக லட்டு வழங்கப்படும்.

பரபர குற்றச்சாட்டு: இந்தச் சூழலில் திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து குஜராத்தில் ஆய்வகத்தின் ரிப்போர்ட்டை மேற்கொள் காட்டி தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.. மேலும், இதற்கு முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி அரசே காரணம் என்றும் கூறினர்.
இது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மறுப்பு: திருப்பதி கோவிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருப்பதாகத் தெலுங்கு தேசம் கட்சி குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதை ஜெகன் மோகன் ரெட்டி திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். மேலும், கடவுளை வைத்து இங்கு அரசியல் செய்வதாகவும் சாடினார்.
மாநிலத்தில் உள்ள உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பவே இதைச் செய்வதாக விமர்சித்த ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியினர் வெளியிட்டுள்ள இந்த ரிப்போர்ட் ஜூலை மாதம் செய்யப்பட்டது என்றும் அப்போது சந்திரபாபு நாயுடு ஆட்சியே இருந்தது என்று கூறியுள்ளார்.
கடுமையான விதிமுறைகள்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நெய்யின் தரம் மோசமாக இருந்ததை அறிந்த உடன் முதல்வர் நாயுடுவுக்கு தகவல் தெரிவித்துவிட்டோம். ஏஆர் டெய்ரி தான் தரமற்ற நெய்யை வழங்கியதற்குக் காரணம். ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை டெண்டர் விடப்படும். அதற்கான தகுதி அளவுகோல் பல தலைமுறைகளாக மாற்றப்படவில்லை. அதே கடுமையான விதிமுறைகள் தொடர்கிறது.
சப்ளையர்கள் தேவையான சான்றிதழ் மற்றும் தயாரிப்பு தரச் சான்றிதழை வழங்க வேண்டும். நெய்யின் மாதிரிகளைச் சோதனைக்கு அனுப்பிவிட்டு அதை வைத்து அரசியல் செய்கிறார்கள். ஆனால், சோதனையைத் தாண்டும் நெய் மட்டுமே லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும். எங்கள் ஆட்சியில் மட்டும் 18 முறை தரமில்லை எனச் சொல்லி பொருட்களை நிராகரித்துள்ளோம்.
உண்மை இல்லை: எனவே, இந்த விலங்கு கொழுப்பு இருப்பதாகச் சொல்வதில் உண்மை இல்லை. எனக்கும் எனது அரசுக்கும் எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்புகிறார்கள். கடவுளை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள்.
கடிதம் எழுதுவேன்: இந்த விவகாரம் குறித்து நான் பிரதமருக்கும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுத உள்ளேன்.. சந்திரபாபு நாயுடு உண்மைகளை எப்படித் திரித்தார்.. அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை விளக்கி கடிதம் எழுத உள்ளேன். பொதுமக்களைத் தவறாக வழிநடத்தியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications
