ஆந்திராவின் கடப்பாவில் மேயர் வீட்டில் குப்பைகளை ஆவேசமாக வீசிய மக்கள்.. நாறிப்போன வீடு
திருப்பதி: ஆந்திர மாநிலம் கடப்பாவில் வரி கட்டாதவர்கள் வீட்டில் குப்பைகள் எடுக்க முடியாது எனக் கூறிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேயர் சுரேஷ் பாபுவை கண்டித்து, அவரது வீட்டின் உள்ளே குப்பைகளை வீசி பொதுமக்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம் நடத்தினர். பலரும் அவரது வீட்டிற்குள் ஆவேசமாக குப்பைகளை வீசிய வீடியோ வெளியாகி உள்ளது.
ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, அம்மாநில முதல்வரானார். அதன்பிறகு அங்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை தெலுங்கு தேசம் அரசு எடுத்து வருகிறது.

இந்த சம்பவங்களால் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில் வரி கட்டாதவர்கள் வீட்டில் குப்பைகள் எடுக்க முடியாது என்று கூறிய கடப்பா மேயர் சுரேஷ் பாபுவின் இல்லத்தின் முன் உள்ளூர் தெலுங்கு தேசம் கட்சியினர் பலர் குப்பைகளை கொட்டினார்கள். இந்த விவகாரம் இரு கட்சியினரிடம் இருந்த பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
கடப்பா மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை வாங்குவது மற்றும் சாலைகளில் குப்பைகளை அகற்றுவதில் தாமதம் செய்வதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில் வரி கட்டாதவர்களின் வீடுகளில் குப்பை வாங்க முடியாது என்று அண்மையில் கடப்பா மேயர் சுரேஷ்பாபு அறிவித்தார்.
இதனால் கோபம் அடைந்த தெலுங்கு தேசம் கட்சியினர் மேயர் வீட்டின் முன்பும், அவரது வீட்டிற்குள்ளும் குப்பை பைகளை தூக்கி கொட்டினார்கள். மேலும் தாங்கள் செய்தது நியாயமானதுதான் எனநியாயப்படுத்தினர். இதற்கு பதிலடியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர், குப்பை கொட்டியவர்களை கைது செய்யக்கோரி, கடப்பாவில் உள்ள சின்ன சவுக் காவல் நிலையத்தில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ மாதவி ரெட்டி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
என்ன நடந்தது: முன்னதாக கடந்த சில நாட்களாக கடப்பா நகர் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடப்பது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ மாதவி ரெட்டிக்கும், ஒய்எஸ்ஆர்சிபி மேயர் சுரேஷ் பாபுவுக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய எம்எல்ஏ மாதவி ரெட்டி, கடப்பாவில் வசிப்பவர்களின் குப்பைகளை அகற்றாமல் பெரும் சிரமத்தை தரும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையிலான மாநகராட்சி நிர்வாகம், கேவலமான அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.
மேயர் சுரேஷ் பாபு தன்னையும், தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசையும் இழிவுபடுத்தும் நோக்கிலும், குப்பைகளை அகற்றாமல் அரசுக்கு எதிராக பிரச்சனைகளை உருவாக்குவதாக இடையூறுகளை ஏற்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். மேயர் விளையாடும் கேவலமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் உள்ளூர் மக்கள் மேயர் வீட்டின் முன்பு குப்பைக் குவியலை கொட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று எச்சரித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த கடப்பா மேயர் சுரேஷ் பாபு, பதிலுக்கு நேற்று செய்தியாளர்களை சந்தித்த பேசினார். அப்போது எம்எல்ஏ மாதவி ரெட்டி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார், இது அவரது ஆதரவாளர்களையும், தெலுங்கு தேசம் கட்சியினரையும் கோபத்தில் ஆழ்த்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் சிலர்,சின்ன சௌக் சந்திப்பில் இருந்து குப்பைப் பைகளை எடுத்துச் சென்று மேயர் இல்லம் முன்பு கொட்டினார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது,
அடுத்த சில நிமிடங்களில் கடப்பா மேயர் சுரேஷ் பாபு தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் சின்ன சவுக் காவல் நிலையம் முன், குப்பைப் பைகளைக் கொட்டி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ மற்றும் பிற செயல்பாட்டாளர்களைக் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் காரணமாக பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் சின்ன சவுக் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications