லட்டு சர்ச்சை: திருப்பதி ஏழுமலையானை குளிர்விக்க நாளை சாந்தி ஹோமம்.. சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!
திருப்பதி: திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருந்ததாக எழுந்த சர்ச்சையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏற்பட்டுள்ள தோஷத்தை போக்க நாளை காலை சாந்தி ஹோமம் நடைபெற உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
திருப்பதி என்றாலே நம் நினைவுக்கு வருவது லட்டு தான். திருப்பதி ஏழுமலையானுக்கு உகந்த பிரசாதமான திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்புகள் கலந்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு மீது குற்றம் சாட்டியிருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மறுத்தது. ஆனால், ஆய்வக அறிக்கை ஒன்று அடுத்த நாள் வெளியானது. திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில், மீன் எண்ணெய், சோயா பீன்ஸ் சூரியகாந்தி எண்ணெய் போன்றவைகளுடன் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு ஆகியவையும் கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது அசைவம் சாப்பிடாத இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஜெகன் மோகன் ரெட்டி தரப்போ இந்த சம்பவத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறி வருகிறது. அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் பொய் என ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
திருமலை திருப்பதி கோவில் லட்டு பிரசாதம் தொடர்பான சர்ச்சை கடந்த சில தினங்களாக உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஏழுமலையான் கோவிலுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்களை தீர்க்க நாளை காலை திருப்பதியில் சாந்தி ஹோமம் நடத்தப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் ந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாடு முழுவதும் உள்ள இந்து பக்தர்கள் திருப்பதி திருமலையை மிகவும் தெய்வீக மற்றும் புனிதமான தலமாக நினைக்கிறார்கள். பாலாஜி மிகவும் விரும்பும் கடவுள்களில் ஒருவர். இங்கு எல்லா பிரார்த்தனைகளும் கேட்கப்படும் என்பது ஒரு நம்பிக்கை. நான் நான் அங்கு காணிக்கை செலுத்த சென்றபோது தாக்கப்பேட்டன். கடவுள் என்னை காப்பாற்றியது ஒரு அதிசயம்.
கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில் புனிதமற்ற பல காரியங்கள் நடந்துள்ளன. இதற்கு பலமுறை பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திருமலையில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் மற்றும் உணவுகள் தூய பொருட்களால் தயாரிக்கப்பட்டு மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆனால் கடந்த ஆட்சியில் நடந்துள்ளது வேதனையான நிகழ்வு.
நாங்கள் மூன்று கோணங்களில் நடவடிக்கை எடுக்கிறோம். முதலில் கோவில் மரபுகளின் படி சுத்திகரிப்பு செய்யப்படும். ஐஜி மட்டத்திலான அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடுகிறேன். SIT ஒரு அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். மேலும், ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே நிர்வாகக் குழுவில் இருப்பார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
நாளை காலை திருமலை ஸ்ரீவாரி கோயிலில் சாந்தி யாகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி நட்சத்திரம் கொண்ட திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை மகா சாந்தி ஹோமம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மகா சாந்தி ஹோமம் என்பது உலகம் முழுவதும் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவுவதற்காக நடத்தப்படுவதாகும். இந்த ஹோமம் நடத்தப்படுவதால் பல விதமான நோய்கள், தொழில் இழப்புக்கள் ஆகியவற்றில் இருந்து விடுபடலாம். செல்வ வளம், ஆரோக்கியம், அமைதி ஆகியவை கிடைக்கும். மனக்கவலைகள் தீரும். இந்த மகா சாந்தி ஹோமம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நடத்தப்படவிருக்கிறது.












Click it and Unblock the Notifications