பூதாகரமாக வெடித்த “லட்டு” சர்ச்சை.. திருப்பதியில் குடோன்களுக்கு சென்ற விசாரணைக் குழு.. பரபர ஆய்வு!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் பிரசித்தி பெற்றது. திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக திருப்பதியில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

சந்திரபாபுவின் இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் அடுத்த நாளே ஒரு ஆய்வக ரிப்போர்ட் வெளியானது. திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யை பரிசோதனை செய்த ஆய்வகத்தின் அறிக்கையின்படி, திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் அனுப்பப்பட்டது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை ஆந்திர மாநில அரசு நியமித்தது. குண்டூர் ஐஜி சர்வாஷ் ரெஷ்த் திரிபாதி தலைமையில் 9 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியது. இந்தக் குழுவில் விசாகப்பட்டினம் டிஐஜி கோபிநாத் ஜட்டி, கடப்பா எஸ்பி ஹர்ஷவர்தன் ராஜு, கூடுதல் எஸ்பி வெங்கட் ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் நேற்று திருப்பதி கிழக்கு காவல் நிலையத்துக்கு சென்று, திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் கலப்பட நெய் வழங்கியதாக தேவஸ்தானம் கொடுத்த புகாரை வாங்கி பரிசீலித்தனர். இதனை தொடர்ந்து பத்மாவதி விருந்தினர் மாளிகையில், நிர்வாக அதிகாரி சியாமள ராவுடன் ஆலோசனை நடத்தினர்.
நெய் குறித்த டெண்டர்கள், நெய் வழங்கிய டெய்ரி நிறுவன விவரங்கள், ஏஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம் குறித்த விவரங்கள், கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் நெய் மற்றும் இதர பொருட்கள் வாங்கப்பட்ட கொள்முதல் விவரங்களை விசாரணை குழு சேகரித்தது.
அந்தக் குழுவினர் தற்போது திருப்பதியில் உள்ள தேவஸ்தான கிடங்கு, திருமலையில் உள்ள தேவஸ்தானத்தின் கிடங்கு, திருப்பதி மலையில் உள்ள ஆய்வகம், பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த குழு 3 நாட்கள் வரை திருப்பதியில் விசாரணை நடத்தி, அதன் பின்னர் திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனத்திலும் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சிறப்பு விசாரணைக் குழு, விசாரணைக்குப் பிறகு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications