திருப்பதி லட்டில் கலந்தது நெய்யே இல்லை.. அது பாமாயில்.. ரசாயனம்.. சிபிஐ அதிர்ச்சி தகவல்
அமராவதி: திருப்பதி லட்டு தயாரிப்பதற்காக கொள்முதல் செய்யப்பட்ட லட்டில் நெய் விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் உண்மையான நெய்க்கு பதிலாக பாமாயில், ரசாயனம் கலந்து போலி நெய் தயாரித்து அதை வேறு வகையில் திருப்பதிக்கு விநியோகம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் என்றாலே எல்லோருக்கும் லட்டு தான் நினைவுக்கு வரும். திருப்பதி லட்டு அந்தளவுக்கு மக்களிடம் பிரபலமடைந்துள்ளது. ஆந்திராவில் கடந்த 2024 ஆம் வருடம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சந்திரபாபு நாயுடு அந்த மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்றார்.

அவர் பதவி ஏற்ற சில மாதங்களிலேயே திருப்பதி லட்டு குறித்து பகீர் புகாரை வைத்து பக்தர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்தபோது திருப்பதி கோயில் நிர்வாக அறங்காவலர் குழுவில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததாக சந்திரபாபு நாயுடு புகார் எழுப்பினார்.
திருப்பதி லட்டு தயாரிப்பதற்காக நெய் கொள்முதல் செய்ததில் அறங்காவலர் குழு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெய்யில் கலப்படமாகியுள்ளது. ஆய்வக பரிசோதனையில் அந்த நெய்யில் மாடு மற்றும் பன்றி கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று சந்திரபாபு கூறினார்.
திருப்பதி கோயிலுக்கு நெய் வழங்கிய திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி .ஃபுட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் மத்திய, மாநில அரசுகள் சோதனை நடத்தின. இதுகுறித்து ஏற்கனவே ஆந்திர மாநில சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்திய நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ, உணவுத்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் போலவே உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த போலோ பாபா டெய்ரி மற்றும் வைஷ்ணவி டெய்ரி நிறுவனங்கள் விசாரணை வளையத்தில் சிக்கியது. இந்த நிறுவனங்களின் முக்கிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஏ.ஆர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகரன், போலோ பாபா நிறுவனத்தின் இயக்குநர்கள் விபின் ஜெயின், பூமில் ஜெயின், வைஷ்ணவி நிறுவனத்தின் சிஇஓ அபூர்வா ஆகியோர் ஜாமீன் கேட்டு ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில், "இவர்கள் விநியோகம் செய்தது உண்மையான நெய்யே இல்லை. பாமாயில் மற்றும் ரசாயனம் மூலம் போலியாக நெய் தயாரித்துள்ளனர். இதை போலே பாபா நிறுவனம் தயாரித்து, அவற்றை ஏஆர் மற்றும் வைஷ்ணவி நிறுவனம் மூலம் விநியோகம் செய்தனர். இதில் அறங்காவலர் குழு மற்றும் உணவு பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளன.
போலே பாபா நிறுவனத்துக்கு பாலை சேகரிப்பதற்கோ, நெய் தயாரிப்பதற்கோ போதிய கட்டமைப்பு இல்லை. அந்த நிறுவனம் தங்களிடம் பால் கொள்முதல் செய்ததே இல்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள். எங்களது ஆய்விலும் அவர்கள் விநியோகம் செய்தது உண்மையான நெய் அல்ல. அது பாமாயில் மற்றும் ரசாயனம் மூலம் கலப்படம் செய்தது தெரியவந்தது.
இது வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக போலோ பாபா நிறுவனம் நேரடியாக விநியோகம் செய்யாமல் ஏஆர் மற்றும் வைஷ்ணவி நிறுவனங்கள் மூலம் உண்மையான நெய் போன்று விநியோகம் செய்துள்ளனர். இது பக்காவான சதி திட்டம். இதற்கான வாட்ஸப் உரையாடல்களை கைப்பற்றியுள்ளோம்.
மேலும், இவர்கள் அனைவரும் பண பலம் படைத்தவர்கள். அவர்கள் வெளியில் வந்தால் ஆதாரங்களை கலைத்து வழக்கை வலுவிழக்க செய்துவிடுவார்கள். எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது." என வாதிட்டனர். இதையடுத்து நீதிமன்றம் வழக்கு விசாரணையை வருகிற 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications