திருப்பதி பிரம்மோற்சவம்..பூலோக வைகுண்டமாக மாறிய ஏழுமலையான் கோவில் - என்னென்ன சிறப்பம்சங்கள்
திருப்பதி: திருமலையில் ஏழுமலை மீது குடிகொண்டு தன்னை நாள் தோறும் நாடி வரும் கோடிக்கணக்கான பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வள்ளலாகத்திகழ்கிறார் வெங்கடாஜலபதி. ஏழுமலையானுக்கு புரட்டாசி மாதம் 9 நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடக்கும். இந்த 9 நாட்களும் மக்கள் வெள்ளம் அலை மோதும். எங்கு நோக்கினும் மக்கள் தலைகள், தலைகள். மலை முழுவதும் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் எதிரொலிக்கும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செவ்வாய்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. அதற்காக, பயன்படுத்தப்படுகின்ற தர்ப்பைப் பாய் மற்றும் கயிறு ஆகியவை திருமலை-திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறை அதிகாரி ஏ.சீனிவாசலு மற்றும் பணியாளர்களால் தேவஸ்தான வனத்துறை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.
பிரம்மோற்சவ விழாவையொட்டி திருமலை முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதால் பூலோக வைகுண்டமாக மாறி மின்னொளியில் ஜொலிக்கிறது. பல லட்சம் டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ நாட்களில் தினந்தோறும் வீதிவலம் வரும் மலையப்பசுவாமி ஒவ்வொரு வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது கண்கொள்ளாக்காட்சி. வெங்கடாஜலபதிக்கு இந்த பிரம்மோற்சவம் நடப்பது குறித்து புராணக்கதையை பார்க்கலாம்.

ஸ்ரீனிவாச பெருமாள் அவதாரம்
நாரதருக்கு ஒரு சந்தேகம் வந்தது. மும்மூர்த்திகளில் யாருக்காக முனிவர்கள் யாகம் செய்ய வேண்டும், இந்த மூவரில் யாகத்தை ஏற்றுக்கொள்ளும் சாந்தமான மூர்த்தி யார் என முனிவர்களிடம் கேள்வி எழுப்பினார் நாரதர். இதையடுத்து பிருகு முனிவர் என்பவர் மும்மூர்த்திகளில் யார் சிறந்தவர் என அறிய விண்ணுலகம் சென்றார். பிரம்மாவையும், சிவனையும் சோதித்து அவர்கள் சிறந்தவர்கள் என அறிந்து கொண்டு வைகுண்டம் சென்றார். நேராக விஷ்ணுவிடம் சென்று அவர் மார்பில் உதைத்தார். நாராயணனோ மிகவும் பொறுமையாக என்னை உதைத்ததால் தங்கள் கால்களுக்கு வலி ஏற்பட்டிருக்குமே என கவலையுடன் கூறினார். அதைக் கேட்ட பிருகு முனிவர் தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டார். பெருமாளும் அவரை மன்னித்தார். முனிவர்கள் செய்யும் யாகங்களை பெற சிறந்த மூர்த்தி மாகவிஷ்ணுவே என பிருகு முனிவர் தீர்ப்பளித்தார். ஆனால், நாராயணின் மனைவி மகாலட்சுமிக்கு கடும் கோபம் வந்தது.

பூலோகம் வந்த மகாலட்சுமி
நான் உங்கள் நெஞ்சில் குடியிருக்கிறேன். உங்களை நெஞ்சில் உதைத்தது என்னை உதைத்தது போலாகும் நீங்கள் அவரை தண்டிக்காமல் மன்னித்து விட்டீர்களே ஏன் இப்படி என்று நாராயணனிடம் கேட்டாள் தேவி, ஒரு நல்ல காரியத்ததை நிறைவேற்றவே அவர் இது போல் நடந்து கொண்டுள்ளார் என பதில் சொன்னார் நாராயணன். ஆனால் அவரது சமாதானத்தை லட்சுமி ஏற்கவில்லை. கோபித்துக் கொண்டு பூலோகம் சென்று விட்டார். இதனால் வருத்தமடைந்த நாரயணனும் பூலோகம் வந்தார். லட்சுமியைத் தேடி அலைந்த நாராயணன் திருப்பதி மலைக்கு வந்து சேர்ந்தார். அங்கு வகுளாதேவியை தனது தாயாக பாவித்து அவருடன் வசித்து வந்தார்.

சீனிவாசன் பத்மாவதி
துவாபாரயுகத்தில், கண்ணன் தன் அவதாரத்தை முடித்துக் கொள்வது குறித்து அனைவரும் வருத்தமடைந்தனர். கண்ணன் அவர்களிடம், நீங்கள் அனைவரும் கலியுகத்தில் என்னோடு வாழ்வீக்கள் என வரமளிததார். கண்ணனை வளர்த்த யசோதா கண்ணனின் இரு திருமணத்தை காண இயலவில்லை. அது குறித்து வருந்திய யசோதாவிடம் கலியுகத்தில் திருவேங்கடத்தில் திருவேங்கடத்தான் உருவில் உங்கள் ஆசையை நிறைவேற்றி வைக்கிறேன். நீங்கள் வகுளாதேவி உருவெடுத்த அங்கு எழுந்தருளியுள்ள வராக மூர்த்தியை வழிபட்டு வாருங்கள் நான் உங்களை அங்கு சந்திக்கிறேன் என்று வரமளித்தார் கண்ணன. யசோதை அதன்படி தன் உடலை விட்டு கலியுகத்தில் வகுளாதேவியாக அவதாரம் எடுத்தாள். வகுளா தேவி நாரயணனை சீனிவாசன் என அன்புடன் அழைத்து வந்தார்.
சீனிவாசன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் பத்மாவதியைச் சந்தித்து அவள் மேல் விருப்பம் பத்மாவதியும் சீனிவாசன் மேல் விருப்பம் கொள்கிறார். இவர்கள் விருப்பத்தை அறிந்த பத்மாவதியின் தந்தை ஆகாச மன்னன் அவர்கள் திருமணத்தை விமரிசையாக நடத்தி வைத்தார்.

திருவேங்கடமுடையான்
ஆகாச மன்னன் மரணமடைந்த பின் அவரது சகோதரர் தொண்டைமான், சீனிவாசனிடம் உங்களை எத்தனை தரிசித்தும் திருப்தி ஏற்படவில்லை. நீங்கள் தயைகூர்ந்து அருள் புரிய வேண்டும் என கேட்டுக் கொண்டார். உடனே சீனிவாசனோ, உன் அண்ணன் பிரம்மச்சாரியாக இருந்த என்னை சம்சாரியாக்கினார். இந்த உலகில் எனக்கு தங்க இடமில்லை. எனவே எனக்கு கோவில் கட்டி வை என்றார். சீனிவாசன் ஓர் இடத்தைக் குறிப்பிட்டுக்காட்டி இங்கு கோவில் கட்டு எனக் கூறினார். பிரம்ம தேவன் முதலிய தேவர்கள், வைணவத் தொண்டர்கள், வேதம் கற்றுத் தேர்ந்த அந்தணர்கள் அனைவரும் பங்கேற்க ஆனந்த நிலையம் என்று பெயரிடப்பட்ட கோயிலில் சீனிவாசனும் பத்மாவதியும் பிரவேசித்தனர்.

கலியுகம் முழுவதும்
பிரம்மதேவர், சீனிவாசனிடம் நீங்கள் கலியுகம் முழுவதும் தங்களை காண வரும் பக்தர்கள் பாவங்களை தீர்த்து வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். வேங் என்றால் பாவம், கடா என்றால் தீர்த்துவைக்கும் சக்தி என்று கூறிய சீனிவாசன், இந்த இடம் வேங்கடா என அழைக்கப்படட்டும் என்றார். சீனிவாசனும் வேங்கடேஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார். இதையடுத்து இந்த ஆலயத்துக்கு விழா எடுக்க பிரம்மன் விரும்பினார். சீனிவாசனிடம் சென்று நாங்கள் இப்போது நடத்தவிருக்கும் விழாவுக்கு சம்மதிக்க வேண்டும் என்றார். இதற்கு வேங்கடநாதனும் சம்மதித்தார். பிரம்மனும், தேவர்களும் இணைந்து நடத்திய அந்த விழா தான் பிரம்மோற்சவம். இது தான் பிரம்மோற்சவம் தொடங்கிய வரலாறு.

கொடியேற்றம்
தர்ப்பைப் பாய் மற்றும் கயிறு ஆகியவை கொடியேற்றத்துக்கு பயன்படுத்தப்படும். தங்கக்கொடி மரத்தில் தர்ப்பைப் பாயை சுற்றுவார்கள். அதில் சிவ தர்ப்பை, விஷ்ணு தர்ப்பை என 2 வகையான தர்ப்பைகள் உள்ளன. அதில் திருமலையில் விஷ்ணு தர்ப்பை பயன்படுத்தப்படுகிறது. திருப்பதி மாவட்டம் ஏர்ப்பேடு மண்டலம் செல்லூர் கிராமத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான வனத்துறை ஊழியர்கள் விஷ்ணு தர்ப்பை புற்களை சேகரித்தனர். அந்தப் புற்களை திருமலைக்குக் கொண்டு வந்து ஒரு வாரம் மிதமான வெயிலில் உலர்த்தினர். தர்ப்பை உலர்ந்ததும், நன்றாகச் சுத்தம் செய்து பாய், கயிறு ஆகியவற்றை தயார் செய்தனர். 22 அடி நீளம், ஏழரை அடி அகலத்தில் தர்ப்பைப் பாய், 200 அடி நீளத்தில் தர்ப்பை கயிறு ஆகியவற்றை தயார் செய்துள்ளனர். அவை இரண்டும் 27ஆம் தேதி கொடியேற்றம் அன்று பயன்படுத்தப்படும் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்னென்ன கட்டுப்பாடுகள்
பிரம்மோற்சவ விழாவையொட்டி திருமலை முழுவதும் அலங்கரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. வண்ண வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதால் மின்னொளியில் ஜொலிக்கிறது. பிரம்மோற்சவ விழாவின் போது லட்சக் கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். ஏழுமலையான் சமேத ஸ்ரீதேவி, பூதேவி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பிரம்மோற்சவ விழாவின் போது கார், வேன் உள்ளிட்ட 12 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்பட உள்ளது. கூடுதலாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் திருப்பதியில் நிறுத்தி விட்டு திருமலைக்குச் செல்லும் அரசு பேருந்துகளில் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வாகனங்களுக்கு அனுமதியில்லை
இதே போல் கருட சேவைக்கு முந்தைய நாளான 30 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 2 ஆம் தேதி இரவு வரை திருமலைக்கு இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை. உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இருசக்கர வாகனத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இருசக்கர வாகனத்தை திருப்பதியில் நிறுத்தி விட்டு அரசு பேருந்தில் சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மலையப்பசாமி வாகன உலா
நாளைய தினம் கொடியேற்றம் தொடங்கி பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், என நாள்தோறும் வாகனங்களில் உலா வரும் மலையப்பசுவாமியை தரிசனம் செய்ய கண் கோடி வேண்டும். என்ன பக்தர்களே பிரம்மோற்சவத்தை காண திருப்பதி செல்ல தயாராகி விட்டீர்களா? ஏழுமலையான் அழைத்தால் மட்டுமே உங்களால் செல்ல முடியும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications