திருப்பதி கோயிலுக்கு வரும் மாற்று மதத்தினருக்கு புதிய நடைமுறை.. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதி: திருப்பதியில் வழங்கப்பட்ட லட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்திருப்பதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே இப்போது திருமலைக்கு வரும் பிற மதத்தினருக்கு புதிய கட்டுப்பாடுகளைத் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையானுக்கு உலகெங்கும் பக்தர்கள் உள்ளனர். உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானைத் தரிசிக்க வருவார்கள்.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் வழங்கப்பட்ட லட்டிற்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்திருப்பதாக சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார். இது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து திருப்பதி கோயிலில் பரிகாரமும் செய்யப்பட்டது. இந்த மாட்டு கொழுப்பு சர்ச்சை குறித்து இப்போது விசாரணை நடந்து வருகிறது.
இந்த சர்ச்சை ஒரு புறம் இருக்க இப்போது திருமலைக்கு வரும் பிற மதத்தினருக்கு புதிய நடைமுறையைத் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலையில் பிற மதத்தினருக்கு புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பும் வேற்று மதத்தினர் ,"தனக்கு ஏழுமலையான் மீது முழு நம்பிக்கை உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து அதில் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும். அதன் பின்னரே திருமலையில் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications