திருப்பதி பக்தர்கள் மனம் குளிரும் வகையில் வெளியான அறிவிப்பு.. இனி கவலை இல்லை
விஜயவாடா: திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், லட்டின் தரத்தில் சமரசமே இருக்காது என்றும், புதிய நெய் விற்பனையாளருடன் சேர்ந்து தினந்தோறும் 8 முதல் 9 லட்சம் லட்டுகளை வழங்கத் தயாராக இருக்கிறோம் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு கூறியுள்ளது ஆந்திர அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர். திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்திவிட்டனர் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்தார்.

இந்தக் குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மறுத்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதம் மற்றும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையை சந்திரபாபு நாயுடு காயப்படுத்தி உள்ளார். சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்யத் தயங்கமாட்டார் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்பா ரெட்டி கூறியிருந்தார்.
குஜராத்தில் உள்ள தனியார் ஆய்வகம் ஒன்றுக்கு திருப்பதி ஏழுமைலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யை சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சோதனையில், லட்டில் மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்டவை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருப்பதி பிரசாதமான லட்டு மற்றும் நெய்யின் தரத்தில் இனி எந்தவிதமான சமரசமும் இருக்காது என்று தெரிவித்துள்ளார். ஆனாலும், கடவுளுக்குப் படைக்கும் பிரசாதம் மற்றும் மற்ற உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யின் விநியோகம் சனிக்கிழமை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இனிமேல் திருப்பதி லட்டு பிரசாதத்தில் கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் நந்தினி நெய்யை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, திருப்பதி கோயிலில் பிரம்மோற்சவம் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஒன்பது நாள்கள் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாகவே நெய் சேமித்து வைக்கும் பணியில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, லட்டு பிரசாதம் தயாரிக்கும் சமையல் அறையின் பொறுப்பாளர் முனிரத்னம் கூறுகையில், அக்டோபர் 4 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் பிரமோற்சவ நிகழ்ச்சியின்போது கோயிலில் தினமும் 8 முதல் 9 லட்சம் லட்டுகள் வரை பக்தர்களுக்கு வழங்க தயார் செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவுக்கு 8 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கான நெய் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து மாற்றம்: பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள கருட சேவைக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 முதல் 9 ஆம் தேதி வரை கோவிலுக்குச் செல்வதற்கும், வெளியே வருவதற்கும் காட் ரோடுகளில் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாது. எனவே, திருப்பதியில் உள்ள ஏபிஎஸ்ஆர்டிசி பேருந்துகளை பக்தர்கள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications