"Sorry" நோ கமெண்ட்ஸ்! திருப்பதி லட்டு சர்ச்சை குறித்த கேள்விக்கு.. ரஜினிகாந்த் கொடுத்த பதில் இதுதான்
திருப்பதி: திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக கருத்து கூற நடிகர் ரஜினிகாந்த் மறுத்துவிட்டார். லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டு இருந்ததாக சர்ச்சை எழுந்து இருக்கும் நிலையில், ரஜினியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேட்டனர். இதற்கு Sorry சொன்ன நடிகர் ரஜினிகாந்த் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக பெரும் சர்ச்சை எழுந்து இருக்கிறது. ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு இந்த விவகாரத்தை எழுப்பினார். முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் உபயோகிக்கப்பட்டு இருக்கிறது. இது மிகப்பெரிய அபச்சாரம் எனக் கூறியிருந்தார்.

அவரின் இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருப்பதி கோவிலின் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டு இருந்ததாக வெளியான தகவல் பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதைத்தொடர்ந்து இந்து அமைப்புகள், திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராகவும், தேவஸ்தான நிர்வாகத்திற்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கினர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருக்கிறது. சிறப்புக்குழு விசாரணைக்கும் ஆந்திர அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவில் பிரசாதத்தில் கலப்பட நெய்யை விதிமுறைகளுக்கு மாறாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு தமிழகத்தில் திண்டுக்கல்லில் உள்ள ஏஆர் டெய்ரி நிறுவனம் சப்ளை செய்ததாகக் கூறப்படுகிறது.
திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் சப்ளை செய்த ஏஆர் டெய்ரி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் திருப்பதி தேவஸ்தான கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளிகிருஷ்ணா புகார் செய்தார். இதன்படி, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவிலின் புனித தன்மையை மீட்கும் வகையில், பரிகார பூஜை, வாஸ்து ஹோமம் மேற்கொள்ளப்பட்டது.
அதேவேளையில் சந்திரபாபு நாயுடு முன்வைத்த குற்றச்சாட்டை ஜெகன்மோகன் ரெட்டி முற்றிலுமாக மறுத்தார். லட்டு பிரசாதத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் போலியான தகவல்களை சந்திரபாபு நாயுடு பரப்புகிறார் எனக் கூறியிருந்தார். திருப்பதி லட்டு விவகாரம் ஆந்திர அரசியலில் பெரும் புயலையே கிளப்பியிருக்கிறது. லட்டு விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதங்கத்தையும் கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்திடம் திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளிக்க ரஜினிகாந்த் மறுத்துவிட்டார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்திடம், ஆன்மீகவாதியாக லட்டு சர்ச்சை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு, Sorry - நோ கமெண்ட்ஸ் என சொன்ன ரஜினிகாந்த் பதிலளிக்க மறுத்துவிட்டார். முன்னதாக வேட்டையன் படம் குறித்து ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ரஜினிகாந்த் அளித்த பதிலில் கூறியதாவது:- படம் பற்றி நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications