"டிஎஸ்பி செய்த தவறு.." திருப்பதி கூட்ட நெரிசல்! உண்மையில் என்ன காரணம்? சந்திரபாபு நாயுடு மேஜர் தகவல்
திருப்பதி: திருப்பதி திருமலையில் சொர்க்கவாசல் தரிசன டோக்கன் வாங்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து இரு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த சந்திரபாபு நாயுடு, இது குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
உலக புகழ்பெற்ற திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படும். சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும்.

திடீர் கூட்ட நெரிசல்:
இந்தாண்டும் அதன்படி தரிசன டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டது. 1.20 லட்சம் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்றும் விஷ்ணு நிவாசம், பூதேவி வளாகம், ஸ்ரீநிவாச வளாகம் உள்ளிட்ட எட்டு இடங்களில் இதற்கான டோக்கனை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இன்று காலை முதல் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நேற்று மாலை முதலே பலர் அங்குக் குவிந்தனர்.
பைராகி பட்டேடா பகுதியில் பிரதான நுழைவாயில் திடீரென திறக்கப்பட்டதால் மக்கள் முண்டியடித்துக் கொண்டு டோக்கன் கவுன்டருக்கு ஓடியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உயிரிழப்பு:
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக டிஎஸ்பி உட்பட இரு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். மேலும், சில அதிகாரிகளைப் பணி இடைநீக்கம் செய்தும் அவர் உத்தரவிட்டார். திருமலையில் என்ன நடந்தது என்பது குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்திய சந்திரபாபு நாயுடு, அதிகாரிகள் சரியாக நிலைமையைக் கையாளவில்லை என்று அதிருப்தி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சஸ்பெண்ட் மற்றும் இடமாறுதல் உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.
துணை போலீஸ் சூப்பிரண்டு ரமணகுமார் மற்றும் கோசாலா இயக்குநர் ஹரிநாத் ரெட்டி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து ஆந்திர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், திருப்பதி காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) எல்.சுப்பாராயுடு, இணை ஆணையர் கவுதமி ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு இடையே ஒருங்கிணைப்பதில் குறைபாடு இருப்பதாகவும் அதுவே விபத்திற்குக் காரணம் என்றும் அவர் விமர்சித்தார்.
யார் மீது தவறு:
இரு தரப்பிற்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில் குறைபாடுகள் இருந்ததாகவும் தவறான தகவல் காரணமாகவே கோயில் கதவுகள் திறக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாகவே பக்தர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக சந்திரபாபு நாயுடு கூறினார். குறிப்பாக டிஎஸ்பியின் நடவடிக்கைகள் தவறு என்று விமர்சித்த அவர், மூத்த அதிகாரிகளும் தயார்நிலையில் இருக்கத் தவறிவிட்டதாகச் சாடினார். ஒவ்வொரு முறையும் தன்னால் தலையிட முடியாது என்றும் அதிகாரிகள் தங்கள் வேலையை பொறுப்புடன் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 40 நிமிடங்களை வரை நீடித்தது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோருடன் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், மோசமாகக் காயமடைந்தோருக்கு 5 லட்ச ரூபாயும் லேசான காயம் அடைந்தோருக்கு 2 லட்ச ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்தார்.
ஒருங்கிணைப்பு தேவை:
மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வேலை வழங்கப்படும் என்ற அவர் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அறிவுறுத்தினார். கோயிலின் புனிதத்தன்மையைப் பேண திருப்பதி தேவஸ்தானம் மற்றும் மாவட்ட அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications