ஒரே ஒரு லட்டு.. கொட்டோ கொட்டுனு கொட்டுது துட்டு! நவம்பரில் மட்டும் 111 கோடியை அள்ளிய ஏழுமலையான்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பரில் மட்டும் 20.35 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ள நிலையில், சுமார் ரூ.111.30 கோடியை உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 97.01 லட்சம் லட்டுகள் விற்பனை ஆனதோடு, 7.31 லட்சம் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப் புகழ் பெற்ற திருமலை திருப்பதி வெங்கடாசலபதி குடி கொண்டிருக்கிறார். மலை மேல் வாழும் ஏழுமலையானை தரிசனம் செய்ய தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மட்டுமல்லாது, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

புரட்டாசி, மார்கழி போன்ற மாதங்களில் பக்தர்கள் எண்ணிக்கை இலட்சக்கணக்கை தாண்டும். மேலும் மார்கழி பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதாலும் சனிக்கிழமை வருவதாலும் தற்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவில்:
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். கடந்த 24ஆம் தேதி 67 ஆயிரம் பக்தர்களும், அதற்கு அடுத்த நாட்களில் சராசரியாக அறுபதாயிரம் முதல் எழுபதாயிரம் பக்தர்களும் தரிசனம் செய்திருக்கின்றனர். மேலும் நாளொன்றுக்கு 22 ஆயிரம் பக்தர்கள் தங்கள் தலைமுடியை நேர்த்திக் கடனாக செலுத்தியிருக்கின்றனர்.
உண்டியல் காணிக்கை:
ஒரு நாளைக்கு சராசரியாக 4 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டது. தற்போது சர்வ தரிசனத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு பக்தர்கள் 16 மணி நேரம் காத்திருக்கின்றனர். வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் 14 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கும் நிலையில், 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் நான்கு மணி நேரத்திற்கு மேல் தரிசனம் செய்ய நேரம் பிடிக்கிறது. நடைபாதை பக்தர்கள் எட்டு முதல் 10 மணி நேரம் தரிசனம் செய்ய காத்திருக்கின்றனர்.
ரூ.111 கோடி காணிக்கை:
இந்த நிலையில் மாதம் தோறும் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில் நவம்பர் மாதம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் நகை உள்ளிட்டவை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டது. அந்த வகையில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் 111 கோடியே 30 லட்சம் ரூபாயை உண்டியல் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
லட்டு விநியோகம்:
மேலும் நவம்பர் மாதத்தில் மட்டும் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 லட்சத்து 35 ஆயிரம் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து உள்ளதோடு, 7 லட்சத்து 31 ஆயிரம் பக்தர்கள் தங்கள் தலை முடியை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தி இருக்கின்றனர். மேலும் பக்தர்களுக்கு 97 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் மிருகக் கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அதற்கு பிறகும் லட்டுகளின் விற்பனை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வருவாய் அதிகரிக்கும்:
டிசம்பர் மாதத்தில் தான் மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் தொடர் விடுமுறை. புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளின் காரணமாக இந்த மாதத்தில் உண்டியல் எண்ணிக்கை 120 கோடி ரூபாயை எட்டும் என்கின்றனர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications