திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று தெப்போற்சவ சோதனை ஓட்டம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தெப்பத்திருவிழா பிப்ரவரி 26-ம் தேதி தொடங்கி மார்ச் 2-ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. கோயிலுக்கு அருகிலுள்ள புஷ்கரணியில் தினமும் இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த உற்சவம் நடைபெறும்.
விழாவுக்கான சிறப்பான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன. புஷ்கரணியில் தெப்பம் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதன் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. நீராழி மண்டபத்தை சுற்றி தெப்பம் வலம் வந்ததை தேவஸ்தான துணை செயல் அதிகாரி லோகநாதன் மற்றும் பிற அதிகாரிகள் குழுவினர் தெப்பத்தில் சென்று ஆய்வு செய்தனர்.

விழாவின் முதல் நாளான பிப்ரவரி 26 அன்று, சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகிய உற்சவ மூர்த்திகள் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தொடர்நது, பிப்ரவரி 27-ம் தேதி ஸ்ரீகிருஷ்ணர், ருக்மிணி தேவியுடன் தெப்பத்தில் மூன்று சுற்றுகள் பவனி வந்து அருள்பாலிக்கவுள்ளார்.
பிப்ரவரி 28 அன்று மலையப்ப சுவாமி தாயாருடன் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று சுற்றுகள் வலம் வருகிறார். மார்ச் 1-ம் தேதி மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் ஐந்து சுற்றுகள் பவனி வந்து அருள்பாலிக்கிறார். நிறைவு நாளான மார்ச் 2 அன்று, மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் ஏழு சுற்றுகள் தெப்பத்தில் வலம் வர உள்ளார்.
தெப்பத்திருவிழாவை முன்னிட்டு, பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சஹஸ்ர தீபாலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 28, மார்ச் 1 மற்றும் மார்ச் 2 ஆகிய தேதிகளில் ஆர்ஜித பிரம்மோத்ஸவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவை ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications