தென்னிந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சியை கற்பனை செய்து பார்க்க முடியாது: அமித்ஷா
திருப்பதி: தென்னிந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சியை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் 29-வது தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மாநாட்டுக்கு தலைமை வகித்தார்.

பங்கேற்றவர்கள் விவரம்
இக்கூட்டத்தில் தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அந்தமான் நிக்கோபர்துணை நிலை ஆளுநர் டிகே ஜோஷி, ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, லட்சத்தீவுகள் நிர்வாகி பிரபுல் கோடா படேல், தெலுங்கானா உள்துறை அமைச்சர் முகமது அலி, கேரளா நிதி அமைச்சர் பாலகோபால், தமிழக அமைச்சர் சேகர் பாபு, மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் பங்கேற்கவில்லை.

தென்னிந்தியாவுக்கு புகழாரம்
இந்த கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, தென்னிந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம், மொழிகள் இந்தியாவின் பழமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. தென்னிந்திய மாநிலங்கள் பங்களிப்பு இல்லாத இந்தியாவின் வளர்ச்சியை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து இந்திய மொழிகளுக்கும் முக்கியத்தும் அளிக்கிறது. இன்றைய தென்னிந்திய மாநில முதல்வர்கள் கூட்ட விவரங்கள் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து இந்திய மொழிகள்
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் 111 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போட்டு சாதித்துள்ளோம். கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்துக்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இதுபோன்ற கவுன்சில்கள், ஆலோசனை வழங்குகிற அமைப்புகள்தான். ஆனாலும் இன்னமும் தீர்க்கபப்டாத பல பிரச்சனைகள் உள்ளன. இன்றைய கூட்டத்தில் 51 பிரச்சனைகளில் 40க்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.

திருப்பதியில் தரிசனம்
இன்றைய கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனைகள், கல்வி, சுற்றுலா உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. முன்னதாக ஆந்திரா முதல்வ ஜெகன்மோகன் ரெட்டியுடன் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலைக்கு சென்று ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார் அமித்ஷா. ஏழுமலையான் கோவில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி ஆகியோர் பிரசாதங்கள், நினைவு பரிசுகள் ஆகியவற்றை அமித்ஷாவுக்கு வழங்கினர். அமித்ஷா பங்கேற்ற இந்த மாநாட்டை முன்னிட்டு திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மாநாடு நடைபெற்ற தனியார் ஹோட்டலில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications