போயஸ் கார்டன் வீட்டில் குடியேறிய சசிகலா.. திருப்பதியில் ஏழுமலையானுக்கு நேர்த்திக்கடன்
திருப்பதி: ஜெயலலிதாவின் தோழி சசிகலா திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டுள்ளார். இன்று அதிகாலையில் விஐபி பிரேக் தரிசனத்தில் உறவினர்களுடன் பங்கேற்று ஏழுமலையானை வழிபட்டார். போயஸ்கார்டனில் தடைகளைத் தாண்டி புது வீடு கிரகப்பிரவேசம் செய்துள்ள சசிகலா ஏழுமலையான் கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய விவிஐபிக்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் வந்து விஐபி பிரேக் தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செல்வார்கள். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ள சசிகலா திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

எம்ஜிஆர் மறைவுக்கு முன்பிருந்தே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன், அவரது சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தில் வசித்து வந்தவர் சசிகலா. ஜெயலலிதா முதல்வரானது முதல், அவர் மறைவு வரை அதே வீட்டில் வாழ்ந்து வந்தார். ஆயிரம் விளக்கு தொகுதி வாக்காளர் பட்டியலிலும் தனது பெயரை சேர்த்துக்கொண்டார். வேதா நிலையத்தின் ரேசன் கார்டிலும் சசிகலா பெயர் இருந்தது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எல்லாமே தலைகீழானது. சில மாதங்கள் போயஸ்கார்டன் வீட்டில் சசிகலா இருந்தாலும் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு போனார் சசிகலா. சசிகலா ஆதரவுடன் பழனிசாமி தமிழக முதல்வரானார். பிறகு பழனிசாமி உள்பட அதிமுகவினர் பெரும்பாலானோர் சசிகலா எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தனர்.
சசிகலா மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு வந்து, ஆளுமை செய்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசு சார்பில் நினைவு இல்லமாக அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக அப்பகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்போராட்டம் நடத்திய தீபா வேதா நிலையத்தை தனது உரிமையாக்கிக்கொண்டு வசித்து வருகிறார்.
தனது வாழ்நாளின் பெரும்பாலான காலங்களை பெரும் செல்வாக்குடன் போயஸ் தோட்டத்தில் கழித்த சசிகலா, இனி வரும் காலங்களையும் ஜெயலலிதா நினைவாக போயஸ் தோட்டத்திலேயே கழிக்க முடிவு செய்து, வேதா நிலையத்துக்கு எதிரில் நிலம் ஒன்றை வாங்கி வீடு கட்டியுள்ளார்
கடந்த மாதம் கோடநாடுக்கு சென்ற சசிகலா, ஜெயலலிதா நினைவிடம் அமைக்க பூஜை நடத்தியிருந்தார். பிறகு சொந்த ஊருக்கு சென்று குலதெய்வ வழிபாடும் நடத்தினார். பெரும் செல்வாக்குடன் வாழ்ந்த போயஸ் கார்டனில் புதிய பங்களா கட்டி சசிகலா குடியேறி இருக்கிறார். மாசி மகம் நாளில் ஜெயலலிதா பிறந்தநாளை புது வீட்டில் கொண்டாடினார் சசிகலா. அந்த பங்களா கோவில் போல இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
பல்வேறு தடைகளை தாண்டி போயஸ் கார்டன் வீட்டில் அடி எடுத்து வைத்துள்ள சசிகலா தனது வேண்டுதலை நிறைவேற்றிய ஏழுமலையானுக்கு நன்றி கூறியுள்ளார். நேற்றைய தினம் திருப்பதி சென்ற சசிகலா வராக சாமியை வணங்கினார். இன்று அதிகாலையில் விஐபி பிரேக் தரிசனத்தில் உறவினர்களுடன் பங்கேற்று ஏழுமலையானை வழிபட்டார். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நிச்சயம் என்று சொல்வார்கள். சசிகலாவின் அரசியல் வாழ்க்கையில் திருப்பம் வருமா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications