பிரபல கோயிலில் உண்டியலில் கற்பூரத்தை போட்ட பெண்.. மொத்தமாக காலியான பணம்
திருப்பதி: ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிடாபுரத்தில் உள்ளது வல்லப மகாசுவாமிகள் கோவில். இங்கு நேற்று சாமி தரிசனம் செய்ய வந்த ஒரு பெண் பக்தை செய்த செயல், பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. பக்தி மிகுதியில் கடவுளுக்கு கற்பூரத்தை காட்டிய அந்த பெண், திடீரென எரிகின்ற கற்பூரத்தை உண்டியலில் போட்டுள்ளார்கள். இதனால் உள்ளே இருந்த ரூபாய் நோட்டுகள் கருகி நாசமானது. இந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
கோயில் உண்டியலில் பலரும் காணிக்கை செலுத்துவதை பார்த்திருப்பீர்கள். சிலர் பணம், தங்க காசுகள், தங்க நகை, வெள்ளி கட்டிகள் போன்றவற்றை போடுவார்கள்.சிலர் வெளிநாட்டு நாணயங்களை உண்டியலில் போடுவார்கள். அவற்றை பிரபலமான கோயில்கள் உண்டியல் நிறைந்த உடன் எண்ணுவது வழக்கம். சில கோயில்களில் உண்டியல் நிரம்ப நீண்ட நாட்களும் ஆகும். சில கோயில்களில் உண்டியல் சில நாளிலேயே நிறைந்துவிடும். அந்த உண்டியலில் ஒரு பெண் ஒரே ஒருகற்பூரத்தை வைத்து காலி செய்திருக்கிறார். நடந்ததை பார்ப்போம்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிடாபுரத்தில் வல்லப மகாசுவாமிகள் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று சாமி தரிசனம் செய்ய பெண் பக்தை ஒருவர் வந்துள்ளார். அப்போது கோவில் ஊழியர்கள் நேற்று வழக்கமான பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அங்கு திடீரென, சுவாமி உண்டியலில் இருந்து புகை வருவதை கவனித்தார்கள். உடனே உஷாரான அவர்கள் உண்டியலுக்குள் தண்ணீரை ஊற்றினர். இதனால் நெருப்பு அணைந்து, உண்டியலில் இருந்த நோட்டுகள் நனைந்து போனது.
பின்னர் உண்டியலை திறந்து பார்த்தபோது ஏராளமான ரூபாய் நோட்டுகள் முழுவதும் எரிந்து போயிருந்தது. பல நோட்டுகள் பாதி எரிந்த நிலையில் காணப்பட்டன. சில நோட்டுகள் உண்டியலில் ஊற்றிய தண்ணீரில் நனைந்திருந்தன. அதன் பின்னர் நனைந்த ரூபாய் நோட்டுகளை ஒரு துணியில் போட்டு காய வைத்தனர். தலைமுடியை உலர்த்தும் 'ஹேர் டிரையர்' கருவி மூலம் சூடான காற்றை ரூபாய் நோட்டுகள் மீது விழச் செய்து அவற்றை உலர்த்தி வைத்தார்கள்.
பின்னர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் பக்தை சூடமேற்றி அதை நேராக கொண்டு உண்டியலில் போடும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த பெண் யார் என்பதை கண்டுபிடித்து விட்டதாகவும், அந்த பெண்ணிடம் இருந்து எரிந்து போன உண்டியல் பணத்தை பறிமுதல் செய்ய உள்ளதாகவும் கோவில் அதிகாரிகள் கூறினார்கள். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications