திருப்பூருக்கு ‘ரியல்’ கிப்ட்.. நியூசிலாந்துடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தத்தால் இவ்வளவு நன்மையா?
திருப்பூர்: நியூசிலாந்துடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவு பெற்றது ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு ஊக்கமாக அமையும் என்று திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இரு தரப்பும் அடுத்த 3 மாதங்களில் கையெழுத்து போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டிலேயே இந்த ஒப்பந்தம் அமலாகும் என்றும் தெரிகிறது. அப்படி அமைந்தால் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1.79 லட்சம் கோடி) அளவுக்கு நியூசிலாந்து முதலீடும் செய்ய போகிறது.
இந்தியா உடன் நியூசிலாந்து வரலாற்று சிறப்பு மிக்கக வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்திருக்கிறது. தற்போதைய நிலையில் நியூசிலாந்தின் சராசரி இறக்குமதி வரி வெறும் 2.3 சதவீதமாக உள்ளது. இது இந்தியாவின் 17.8 சதவீதத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானது ஆகும்.

ஏற்கனவே நியூசிலாந்தின் வரி விதிப்புப் பிரிவுகளில் 58.3 சதவீதம் ஏற்கனவே வரி விலக்கு பெற்றுள்ளன. இப்போது புதிதாக வரியில்லா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவின் தொழிலாளர்கள் மிகுந்த துறைகளான ஜவுளி, காலணிகள், தோல், கடல் உணவு உற்பத்தி, ரெத்தினக்கற்கள், நகைகள், கைவினைப்பொருட்கள், என்ஜினீயரிங் பொருட்கள் உள்ளிட்ட துறைகளுக்கு சந்தை வசதி அதிகரிக்கும்.
வேலைவாய்ப்பு அதிகரிக்கும் துறைகள்
மேலும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகள், தொழில்முறை சேவைகள், கல்வி, நிதிச் சேவைகள், சுற்றுலா, கட்டுமானம் மற்றும் பிற வணிகச் சேவைகளும் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும். எனவே நியூசிலாந்து நாட்டின் வரியில்லா ஒப்பந்தம் காரணமாக பல இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
எந்தவித கட்டணமும் இல்லை
திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "புதிதாக அமைந்துள்ள வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் நியூசிலாந்து சந்தையில் 100 சதவீதம் வரிவிலக்கு வழங்கப்படும். குறிப்பாக ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை பொருட்களுக்கு ஏற்கனவே 10 சதவீதம் கட்டணம் இருந்து வந்தது. இனி எந்தவித கட்டணமும் இல்லாமல் அனுப்பலாம்.
5000 கோடி ஏற்றுமதி
2024-ம் ஆண்டுக்கான நியூசிலாந்தின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதி ரூ.10 ஆயிரத்து 394 கோடியாகும். இதில் பின்னலாடைகள் ரூ.5 ஆயிரத்து 424 கோடிக்கு நடந்துள்ளது. நியூசிலாந்துக்கான இந்தியாவின் ஆடை ஏற்றுமதி தற்போது ரூ.460 கோடியாக உள்ளது. இது நியூசிலாந்தின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதியில் 4.40 சதவீதம் ஆகும். நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் மொத்த ஆடை ஏற்றுமதியில் இந்தியாவின் பின்னலாடைகள் 52 சதவீதம் பங்கை கொண்டுள்ளது.
இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை
இந்த வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்துவதன் மூலமாக இந்திய ஏற்றுமதியாளர்கள் குறிப்பாக பின்னலாடைத்துறையினர் தங்கள் சந்தை பங்கை கணிசமாக விரிவுபடுத்துவதோடு ஊக்கமாக அமையும். மேலும் தோல், கைவினைப்பொருட்கள், ஜவுளி, ஆடை தொழிலாளர்கள் அதிக வேலைவாய்ப்பை பெற முடியும். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் நடைபெற்று வரும் வர்த்தக பேச்சுவார்த்தை இந்தியாவின் ஏற்றுமதி வேகத்தை வலுப்படுத்த உதவும் என்று ஏ.இ.பி.சி. தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications