ரிதன்யா தற்கொலையில் திடீர் திருப்பம்! கோயிலுக்கு போன போது வந்த போன் கால்! வழக்கறிஞர் பரபரப்பு தகவல்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரைச் சேர்ந்த 27 வயது ரிதன்யா, வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இவருக்கும் கவின்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
கடந்த ஜூன் 28 அன்று, கோயிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு காரில் புறப்பட்ட ரிதன்யா, கைகாட்டிப்புதூரில் காருக்குள்ளேயே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன், ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்அப்பில் 8 வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பியிருந்தார். அதில், 500 பவுன் நகை வரதட்சணையாகக் கேட்கப்பட்டதாகவும், கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்ததாகவும் கதறி அழுதபடி தெரிவித்திருந்தார்.
திருமணத்தின்போது 300 பவுன் நகை, ரூ.70 லட்சத்திற்கு சொகுசு கார் மற்றும் ரூ.2.25 கோடி செலவில் திருமணம் நடத்தப்பட்டதாகவும், மீதி 200 பவுன் நகையை எப்போது கொடுப்பார்கள் என கவின்குமார் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும் ரிதன்யாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சேவூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரைக் கைது செய்தனர். மாமியார் சித்ராதேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ஆரம்பத்தில் கைது செய்யப்படவில்லை. இதனிடையே, கவின்குமாரின் ஜாமீன் வழக்கானது வரும் ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரிதன்யா தற்கொலை குறித்து வழக்கறிஞர் பிரியதர்ஷினி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
"ரிதன்யாவிற்கு கவின்குமார் பாலியல் ரீதியான தொல்லைகள் (செக்ஸ் டார்ச்சர்) கொடுத்துள்ளார். இந்தத் தொல்லைகள் குறித்து யாரிடம் சொன்னாலும் 'பொறுத்துப்போ, அனுசரித்துப் போ' எனச் சொல்லி வந்தது ரிதன்யாவுக்கு ஏமாற்றத்தை அளித்தது."
"ரிதன்யா காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்திருந்தால் போதும்; இவர் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. மேலும், தினமும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சரை அனுபவித்த ரிதன்யா, காரை எடுத்துக் கொண்டு சென்றது தற்கொலை செய்து கொள்ள அல்ல. அவர் கோயிலுக்குச் செல்லத்தான் போயிருக்கிறார்."
"வீட்டில் மாமியாரிடம் சொல்லிவிட்டு சென்றிருந்தார். அப்போது திடீரென ரிதன்யாவுக்கு கவின்குமார் போன் போட்டு கடுமையாக திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால்தான் அந்தப் பெண் கோயிலுக்குச் செல்லும் முடிவை மாற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து பூச்சி மருந்தை வாங்கியுள்ளார்."
"பிறகு தனது தந்தைக்கு 8 ஆடியோ மெசேஜ்களை அனுப்பிவிட்டு வாங்கி வைத்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். ஒருவேளை கவின்குமார் போன் செய்யாமல் இருந்திருந்தால் ரிதன்யா உயிருடன் இருந்திருப்பாரோ என்னவோ!" இவ்வாறு வழக்கறிஞர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications