பல்லடத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மதுபோதையில் மர்மநபர்களால் கொல்லப்பட்ட 4 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ 2 லட்சம் நிதியுதவி அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (47). இவர் தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு இவரது வீட்டின் அருக 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

இதனை செந்தில் குமார் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அந்த கும்பல் செந்தில் குமாரை முதலில் அரிவாளால் வெட்டி கொன்றது. இதை தடுக்க சென்ற அவருடைய தம்பி மோகன்ராஜையும் அவருடைய தாய் புஷ்பவதி, சிச்தி ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டியுள்ளனர்.
இதில் அவர்களது கை,கால்கள் தனித்தனியே வெட்டி வீசப்பட்டன. 4 பேரையும் வெட்டிச் சாய்த்த அந்த கும்பல் அந்த இடத்தைவிட்டு தப்பிச் சென்றது. இதனிடையே அலறல் சப்தம் கேட்டு பொதுமக்கள் குவிந்தனர். தகவலறிந்த பல்லடம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். இந்த நிலையில் உடலை கைப்பற்றி அவற்றை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலைக்கு டாஸ்மாக்தான் காரணம் என்பதால் அக்கடைகளை மூடுமாறு சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் விசாரணையில் இது முன்விரோதத்தால் நடந்த கொலை என சொல்லப்படுகிறது.

விசாரணையில் செந்தில்குமாரிடம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் (34) என்பவர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பணம் பிரச்சினை தொடர்பாக செந்தில்குமார், வெங்கடேஷை வேலையை விட்டு நீக்கியுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று வெங்கடேஷ் மற்றும் சிலர் செந்தில்குமார் இடத்தில் மது அருந்தி பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளனர். மேலும் அவர்கள் 4 பேரையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி அளிப்பதாகவும் ஏற்கெனவே ஒருவர் கைதான நிலையில் தற்போது மற்றவர்களையும் விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications