நில அளவீடு.. நிலத்தை சப் டிவிஷன் செய்து.. திருப்பூரை திகைத்த வைத்த சர்வேயர்..ஈரோட்டை கலங்கடித்த விஏஓ
திருப்பூர்: வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறைகளில் அடிக்கடி நடந்து வரும் கைது சம்பவங்கள், தமிழக மக்களை கவலைக்கும், வருத்தத்துக்கும், அதிருப்திக்கும் ஆளாக்கி வருகிறது. இதோ திருப்பூரில் ஒரு அரசு அதிகாரி கைதாகி உள்ளார். அவரிடம் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறைகளில் நாளுக்கு நாள் லஞ்சம் வாங்கி கைதாகும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.. லஞ்சம் வாங்குபவர்கள் கைதாகி மீடியாக்களில் செய்திகளாக வந்தபோதிலும், அடுத்தடுத்த அதிகாரிகளின் லஞ்ச லாவண்யம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.

2 நாட்களுக்கு முன்புகூட, ஈரோடு மாவட்டத்தில் விஏஓ ஒருவர் கைதானார்.. தாளவாடி தாலுகா, அரேபாளையம், சீஹட்டியை சேர்ந்தவர் ஆனந்தன்.. இவர் தன்னுடைய மாமனாரின் அப்பா இறப்புக்கு வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக, ஆசனூர் விஏஓ ருத்ர செல்வனை (36) அணுகினார்... ஆனால், 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என்று, விஏஓ ருத்ர செல்வன் கேட்டுள்ளார்.
லஞ்ச பேரம்: இறுதியில், 50 ஆயிரம் ரூபாய் தர பேரம் பேசி, 5,000 ரூபாய் முதல் கட்டமாக ஆனந்தன் கொடுத்தார். மீதி பணத்தை, 10ம் தேதி தருவதாக ஆனந்தன் சொல்லியிருக்கிறார்.
அதேசமயம் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில், ஆனந்தன் புகார் செய்தார். அவர்கள் திட்டப்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களுடன், விஏஓ ஆபீசுக்கு சென்று ஆனந்தன் வழங்கினார். அப்போது வளாகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விஏஓவை கையும் களவுமாக கைது செய்தனர்.

சொந்த நிலம்: இதோ இப்போது திருப்பூரிலும் ஒரு அதிகாரி கைதாகி உள்ளார்.. மணிகண்டன் என்பவர் திருப்பூர் அவிநாசி சாலை பங்களா பஸ் ஸ்டாண்டு அருகே பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக அவிநாசி ராமநாதபுரத்தில் சொந்தமாக 25 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பதிவு செய்து, பட்டா பெறுவதற்காக சப் டிவிசன் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இதற்காக சேவூர் நில அளவையர் காளியப்பன் (54) என்பவரை அணுகி உள்ளார்.. சர்வேயர் காளியப்பனும் கடந்த 10-ம் தேதி அவர் நிலத்தை அளந்து தந்துள்ளார்.. ஆனால், தொடர்ந்து சப் டிவிசன் செய்து தரவேண்டுமானால் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார் காளியப்பன்... தன்னுடைய சொந்த நிலத்துக்கு எதுக்காக லஞ்சம் தர வேண்டும் என்று நினைத்த மணிகண்டன், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் அளித்தார்.
விசாரணை: 3 நாட்கள் அலுவலக விடுப்புக்கு பிறகு, சேவூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை ஒட்டிய பகுதியில் உள்ள அவரது அலுவலகத்துக்கு காளியப்பன் நேற்று வந்திருக்கிறார்.. அப்போது மணிகண்டன், காளியப்பன் ரூ.10 ஆயிரத்தை சர்வேயரிடம் தந்துள்ளார்.. இதையடுத்து, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆய்வாளர் சசிலேகா தலைமையிலான போலீஸார் கையும் களவுமாக பிடித்து காளியப்பனை கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications