திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு
திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு, கியாஸ் முக்கிய எரிபொருளாக இருக்கிறது. ஈரான்-இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக கச்சா எண்ணெய் வரத்து குறைவால் வர்த்தக கியாஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குழாய் வழி இயற்கை கியாஸ் திட்டத்தை திருப்பூர் பின்னலாடை தொழில்துறைக்கு பயன்படுத்த திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத மீத்தேன் கியாஸ் இதில் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு குழாய் வழி இயற்கை கியாஸ் பயன்படுத்த ஏற்றுமதியாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள். இதுதொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நேற்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் பேசுகையில், 'ஐரோப்பிய நாடுகளில் வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டின் படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லா ஆடைகளை தயாரித்து வழங்க அறிவுறுத்தி வருகிறார்கள். எனவே எல்.பி.ஜி. கியாஸ், நிலக்கரி போன்ற எரிபொருட்களின் பயன்பாட்டை குறைத்து குழாய்வழி இயற்கை கியாசை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
இன்னும் 2 ஆண்டுகளில் ஆடை தயாரிப்பு விதிமுறைகளை வெளிநாடுகளில் கடைபிடிப்பதால் குழாய் வழி இயற்கை கியாஸ் சேவையை திருப்பூரில் பயன்படுத்த தயாராக வேண்டியிருக்கிறது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஆடைகளின் உற்பத்தி செலவு 15 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே குழாய் வழி இயற்கை கியாஸ் திட்டத்தை செயல்படுத்த அரசு முன்னுரிமை வழங்க வேண்டும். இதற்கு ஏற்றுமதியாளர்கள் சங்கம் முழு ஒத்துழைப்பை வழங்கும்' என்றார்.
அதானி கியாஸ் நிறுவன அதிகாரிகள் இந்த திட்டம் குறித்து ஏற்றுமதியாளர்களுக்கு விளக்கி கூறினார்கள். இதில் திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர், ரோட்டரி பிரிண்டிங் சங்கத்தினர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
திருப்பூரில் குழாய் வழி கியாஸ் ஏன் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி செய்யும்போது, இப்போது "வளம் குன்றா வளர்ச்சி ஒரு கட்டாய விதியாகிவிட்டது. அதாவது நிலக்கரி அல்லது விறகு எரிப்பதன் மூலம் வெளிப்படும் கார்பன் உமிழ்வு அதிகமாக இருந்தால், அந்த ஆடைகளை வாங்க வெளிநாட்டு நிறுவனங்கள் மறுக்கின்றன. இயற்கை கியாஸ் என்பது தூய்மையான எரிபொருள் என்பதால், இதை மாற்றும்போது திருப்பூரின் ஆடைகள் உலகத்தரம் வாய்ந்தவையாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும் அங்கீகரிக்கப்படும்.
தற்போது பயன்படுத்தப்படும் வணிக ரீதியான சிலிண்டர்கள்மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் விலை சர்வதேச அரசியலால் (ஈரான்-இஸ்ரேல் போர் போன்றவை) அடிக்கடி மாறுகிறது. குழாய் வழி கியாஸ் என்பது சிலிண்டர்களை விடச் செலவு குறைவானது. சிலிண்டர்களைக் கையாளுதல், சேமித்து வைத்தல் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் இதில் மிச்சமாகும். இது ஒட்டுமொத்த உற்பத்திச் செலவை 15% வரை குறைக்க உதவும் என்று ஏற்றுமதியாளர்கள் கருதுகிறார்கள்.
அதேபோல் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் சாய ஆலைகள் மற்றும் பிரிண்டிங் அலகுகள் தற்காலிகமாக மூடப்பட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே குழாய் வழி கியாஸ் என்பது நேரடியாக ஆலைக்கே வருவதால், தட்டுப்பாடு இன்றி 24 மணி நேரமும் வேலைகளைத் தொடர முடியும். இதற்காக அதானி கியாஸ் போன்ற நிறுவனங்கள் திருப்பூரில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகின்றன.
பின்னலாடைகளை உலர்த்துதல் மற்றும் பதப்படுத்துதல் பணிகளில் வெப்பம் சீராக இருக்க வேண்டும். கியாஸ் மூலம் கிடைக்கும் வெப்பம் சீரானது , இது துணிகளின் தரத்தை மேம்படுத்தும். விறகு அல்லது நிலக்கரியைப் பயன்படுத்தும்போது துணிகளில் கறை அல்லது சாம்பல் படியும் வாய்ப்பு அதிகம் ஆகும். எனவே தான் குழாய் வழி கேஸ் தான் தான் இனி திருப்பூரில் இருக்க போகிறது.












Click it and Unblock the Notifications