திருப்பூருக்கு வருது ஜாக்பாட்.. இது வேற லெவல் அறிவிப்பு.. இப்படி நடந்தால் ஊரே மொத்தமா மாறிடும்! வாவ்
திருப்பூர்: தமிழகத்தின் புதிய ஜவுளி தலைநகர் என்று சந்தேகம் இல்லாமல் திருப்பூரை சொல்லலாம். திருப்பூருக்குப் போட்டியாக வளர்ந்த வங்கதேசத்தில் இப்போது உள்நாட்டுச் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் திருப்பூர் அடுத்த கட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிவிடும் என்கிறார்கள் துறை சார்ந்த வல்லுநர்கள்.
நமது நாட்டில் ஜவளி துறையில் முன்னணி மாநிலமாக திருப்பூர் இருக்கிறது. சமீப காலமாகத் திருப்பூருக்குப் போட்டியாக இருந்தது வங்கதேசம் தான். ஆனால், இப்போது வங்கதேசத்தில் உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஜவளி துறை: இந்த நேரத்தை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் துறை சார்ந்த வல்லுநர்கள். இதற்கிடையே தமிழகத்தின் புதிய ஜவுளிக் கொள்கை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஜவளி துறையில் திருப்பூர் நல்ல நிலையில் இருக்கும் நிலையில், அதை வலுப்படுத்தும் வகையில் இந்த புதிய ஜவுளிக் கொள்கைகள் இருக்கும் என ஜவுளி மற்றும் காதி துறை முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முதலில் உற்பத்தித் துறையின் பங்கு மிகப் பெரியதாக இருந்தாலும், இப்போது அது மாறிவிட்டது. இப்போது மாநிலத்தின் வளர்ச்சியில் சேவைத் துறைக்குத் தான் முக்கிய பங்கு இருக்கிறது. தமிழகத்தின் ஜிடிபியில் சுமார் 65% இப்போது சர்வீஸ் எனப்படும் சேவை துறையில் இருந்தே வருகிறது. எந்தவொரு பகுதியும் வளர வரச் சேவைத் துறையை நோக்கியே செல்லும் என்றாலும் உற்பத்தித் துறையிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்.
உற்பத்தித் துறை ஏன் முக்கியம்: உற்பத்தித் துறை விரிவுபடுத்துவது சவாலான ஒன்று என்ற போதிலும், மாநிலத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பைத் தரும் துறையாக உற்பத்தித் துறை இருப்பதால் அதற்கு உரியக் கவனம் கொடுத்தாக வேண்டும் என்றும் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் அவர் இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.
இப்போது திருப்பூரில் ₹ 35,000 கோடி மதிப்பில் ஏற்றுமதி வணிகம் நடக்கிறது. அதேபோல ₹25,000 கோடி மதிப்பிலான உள்நாட்டு வர்த்தகம் திருப்பூரில் நடக்கிறது. இந்தளவுக்கு உற்பத்தித் துறையில் மிக முக்கிய நகரமாகத் திருப்பூர் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதிலும் முக்கிய நகரமாக இருக்கிறது. அங்கு ஜவளி துறையில் வேலை செய்யும் சுமார் 80% தொழிலாளர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்பு: இந்தளவுக்கு முக்கியமான நகரமாக இருக்கும் திருப்பூர் ஜவளி துறையில் மேலும் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய கொள்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்பின்னிங் மில்கள் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. தேசிய அளவில் ஸ்பின்னிங் தொழிற்சாலையில் சுமார் 35% உற்பத்தி தமிழ்நாட்டில் தான் நடக்கிறது. இவ்வளவு முக்கியமான துறை என்ற போதிலும் பழைய கால இயந்திரங்களே இதில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த துறையை நவீனப்படுத்துவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
இதற்காகத் தொழில் நிறுவனங்களுக்கு 6% வட்டி மானியம் வழங்க மாநில அரசு ₹500 கோடி ஒதுக்கியுள்ளது. மேலும், தொழில்நுட்ப ஜவுளி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், சர்வதேச தரம் மற்றும் தொழில்நுட்பத்திற்கு இணையாக புதிய வழிகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தவும் ₹25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வல்லுநர்கள் கருத்து: இது தொடர்பாக துறை சார்ந்த நபர்கள் கூறுகையில், "பசுமை திருப்பூர் என்பதை நோக்கி நகரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளூரிலும் ஆதரவு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவநிலை மாற்றத்தால் திருப்பூரில் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. அதைக் கருத்தில் கொண்டு அதேநேரம் தொழிற்துறையையும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications