திருப்பூர் கோவில் இடிப்பு.. இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு! காடேஸ்வரா சுப்ரமணியம் காயம்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ராக்கியாபட்டியில் உள்ள குமரன் குன்று கோவிலை ஆக்கிரமித்துள்ளதாக கூறி வருவாய்த்துறை இடித்து, அப்புறப்படுத்தும்போது இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது போலீசாருக்கும் இந்து முன்னணி கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கீழே விழுந்தில் லேசான காயம் ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த ராக்கியாபட்டியில் குமரன் குன்றில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் வருவாய்த்துறை புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கூறி, அதை அகற்றும்படி அரசு அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். அதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கோவிலில் இருக்கும் சிலைகளை அகற்ற இன்று வருவாய்த்துறையினர் அங்கு சென்றனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள், இந்து முன்னணியினர், பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் ஏராளமானோர், வருவாய்த்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில், சிலர் காயம் அடைந்தனர். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கீழே விழுந்தார். காயம் அடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்திய பிறகு, அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு கோயிலை அகற்றினர். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "கோவிலைக் காக்க வந்தோரைத் தாக்கும் திமுக அரசு தூக்கியெறியப்படும். திருப்பூர் மாவட்டம் ராக்கியாபட்டி பகுதியில் உள்ள செல்வ முத்துக் குமாரசாமி திருக்கோவிலை திமுக அரசு இடிக்க முயற்சித்ததோடு, அதைத் தடுக்க வந்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மீதும், பாஜக நிர்வாகிகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
மதச்சார்பின்மை என்னும் போர்வையில் கோவிலைக் காக்க வந்த பக்த கோடிகளைத் தாக்குவது, குன்றத்தில் தீபத்தூணில் தீபமேற்ற மறுப்பது, அறுபடைவீட்டை சுடுகாட்டுடன் ஒப்பிடுவது, திருத்தேரோட்டத்தில் வைத்து பக்தர்களை வசைபாடுவது, கோவிலுக்குச் செல்வதை அநாகரீகம் என்று இழிவுபடுத்துவது, அடிப்படை அறிவின்றி சனாதன தர்மத்தைக் கொடூர நோய்களுடன் ஒப்பிடுவது எனத் தொடர்ந்து இந்து விரோதப் போக்கைக் கைவிடாது தூக்கிப்பிடிக்கும் திமுக அரசு தனது இந்து மத வெறுப்பாலேயே மண்ணைக் கவ்வும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications