முதலீடு செய்த பணம் எங்கடா? நண்பனின் மகனையே கடத்திய உயிர் தோழன்.. கடைசியில் நடந்த சோகம்!
திருப்பூர்: திருப்பூர் அருகே ரூ.5 கோடி கேட்டு சிறுவனை கடத்திய நபர், காவல்துறையினர் தன்னை நெருங்கியதையடுத்து செய்வதறியாது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தை சேர்ந்த ராகேஷ் என்பவர்தான் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது என்பதும், இதற்கு முன்னர் சிறுவனின் தந்தைக்கும் ராகேசுக்கும் தொழிற் பகை இருந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொழில் பகையால் சிறுவனை கடத்தி, பின்னர் என்ன செய்வதென தெரியாமல் தூக்கிட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி
திருப்பூரின் வேலம்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கட்டடத் தொழிலை செய்து வருகிறார். இவருக்கும் கேரளாவை சேர்ந்த ராகேஷ் என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் இணைந்து தொழில் செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல 100 வீடுகளை கட்டி விற்பனை செய்யலாம் என்று இருவரும் முடிவெடுத்துள்ளனர். இதற்காக தனது தரப்பிலிருந்து ரூ.36 லட்சத்தை ராகேஷ் கொடுத்துள்ளார்.

முதலீடு
ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் எந்த பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் சிவக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போதுதான் இந்த வீடுகள் அனைத்தும் சிவக்குமாரின் மனைவி பேரில் பதிவாகியிருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தின் உச்சக் கட்டத்திற்கு சென்ற ராகேஷ், தன்னிடமிருந்து வாங்கிய பணம் அல்லது அதற்கு ஈடாக வீடுகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் இதற்கு சிவக்குமார் மறுத்ததாக சொல்லப்படுகிறது.

கடத்தல்
இது பெரும் பிரச்னையாக வெடிக்கவே, கடந்த ஜூலை மாதம் இரு தரப்பினரையும் அழைத்து காவல்துறையினர் சமாதானம் பேசியுள்ளனர். இதில், ராகேசுக்கு ரூ.36 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி பிரச்னை சமாதானமாக பேசி தீர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் பின்னரும் சிவக்குமார் பணம் தரவில்லை. ஏற்கெனவே ஆத்திரத்தின் உச்சியிலிருந்த ராகேசுக்கு, சிவக்குமாரின் போக்கு மேலும் கோபத்தை அதிகரிக்க செய்துள்ளது. இதனையடுத்து ராகேஷ் சிவக்குமாரின் 15 வயது மகனை கடத்தியுள்ளார்.

தற்கொலை
கடத்தி சென்ற சிறுவன் மற்றும் ராகேஷ் என இருவரும் கேரளாவின் கொல்லத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் காவல்துறையினர் சிறுவனை மீட்கும் பணியில் அதிரடியாக இறங்கினர். காவல்துறை தன்னை நெருங்கியதை தெரிந்துகொண்ட ராகேஷ் செய்வதறியாது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை எதிர்பார்க்காத காவல்துறையினர் சிறுவனையும், ராகேஷின் உடலையும் மீட்டனர். ரூ.36 லட்சத்திற்காக சிறுவனை கடத்தி என்ன செய்வதென்று தெரியாமல் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications