திருப்பூரின் வரலாற்றை எழுத போகும் இடம் இதுதான்.. திருப்பூர் தெற்கு, மடத்துக்குளம் முடிவுகள் முதலில்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 19 லட்சத்து 83 ஆயிரத்து 882 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 17 லட்சத்து 56 ஆயிரத்து 109 வாக்காளர்கள் வாக்களித்தனர். 88.52 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் நடக்கிறது. 8 தொகுதிக்கும் எத்தனை சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் வரும் மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. இதில் திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தரை மொத்தம் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 19 லட்சத்து 83 ஆயிரத்து 882 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 17 லட்சத்து 56 ஆயிரத்து 109 வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதாவது 88.52 சதவீதம் வாக்குகள் திருப்பூர் மாவட்டத்தில் பதிவாகி உள்ளது.

வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி கட்டிடத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 224 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
எத்தனை வேட்பாளர்கள்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, பல்லடம், காங்கயம் தொகுதிகளில் தலா 15 வேட்பாளர்களும், திருப்பூர் தெற்கு தொகுதியில் 24 வேட்பாளர்களும், அவினாசியில் 14, மடத்துக்குளத்தில் 13, உடுமலையில் 11, தாராபுரத்தில் 9 என மொத்தம் 116 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலின் முக்கிய நிகழ்வான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
எத்தனை சுற்றுகள் எண்ணப்படும்
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி கட்டிடத்தில் மே 4ம் தேதி காலை வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த உடனே முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இதற்காக ஒரு தொகுதிக்கு 5 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் ஒட்டப்பட்ட பெட்டிகளில் முதலில் தபால் வாக்குகள் பிரித்து வைக்கப்பட்டு அதன்பிறகு ஓட்டுகள் எண்ணப்படும்.
எத்தனை பேர் பணியில் இருப்பார்கள்
தபால் வாக்கு எண்ணிய பிற மின்னணு வாக்கு எண்ணும் பணியும் தொடங்கும். திருப்பூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிக்காக 408 அலுவலர்கள் மற்றும் தபால் வாக்கு எண்ணும் பணிக்கு 160 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நுண்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், எந்திர உதவியாளர்கள் அடங்குவார்கள்.
14 மேஜைகள் போடப்படும்
மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் அமைத்து எண்ணப்படும். எந்திரத்தை கொண்டு வந்து, முதலில் பதிவான வாக்குகள் ஏப்ரல் 23ம் தேதி பதிவான கடைசி வாக்குகளுடன் பொருந்துகிறதா என்று சரிபார்க்கப்படும். அதன்பிறகு ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் கணக்கிடப்படும். வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து சுற்றுகள் வேறுபடும். அதன்படி தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடிகள் உள்ளதால் 23 சுற்றுகளாகவும், காங்கயம் தொகுதியில் 318 வாக்குச்சாவடிகள் என்பதால் 23 சுற்றுகளாகவும், அவினாசி தொகுதியில் 372 வாக்குச்சாவடிகள் என்பதால் 27 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படும்.
பல்லடம் தொகுதி
திருப்பூர் வடக்கு தொகுதியில் 442 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதனால் 32 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும். திருப்பூர் தெற்கு தொகுதியில் 289 வாக்குச்சாவடிகள் என்பதால் 21 சுற்றுகளாகவும், பல்லடம் தொகுதியில் 480 வாக்குச்சாவடிகள் என்பதால் 35 சுற்றுகளாகவும், உடுமலையில் 307 வாக்குச்சாவடிகள் உள்ளதால் 22 சுற்றுகளாகவும், மடத்துக்குளத்தில் 294 வாக்குச்சாவடிகள் உள்ளதால் 21 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. அதன்படி சுற்றுகள் குறைவாக உள்ள திருப்பூர் தெற்கு, மடத்துக்குளம் தொகுதிகள் முடிவு முதலிலும், பல்லடம் தொகுதி முடிவு கடைசியிலும் தெரியவரும்.












Click it and Unblock the Notifications