திருப்பூரில் 10 ஆண்டுக்கு பின் பிறந்த ட்வின்ஸ்.. சந்தோஷமாக வாழ்ந்த நகை தொழிலாளிக்கு எமனான வேகத்தடை
திருப்பூர்: இன்றைக்கு வேகத்தடைகள் விதிகளை மீறி அமைக்கப்படுகின்றன. அதுவும் அதிக உயரத்தில் எந்த எச்சரிக்கையும் இன்றி தனிநபர்களின் வற்புறுத்தல் காரணமாக சட்டவிரோதமாக அமைக்கப்படுகின்றன. அப்படி அமைக்கப்படும் வேக்கதடைகள் குறித்து எச்சரிக்கை பலகையும் வைக்கப்படுவது இல்லை. அதனால் இன்று வெள்ளகோவிலில் தங்க நகை ஆபரணம் செய்யும் தொழிலாளி உயிருடன் இல்லை..
சட்டவிரோதமாக சிலரின் வற்புறுத்தலின் பேரில் சாலைகளில் வேகத்தடைகள் வைக்கப்படுகின்றன. தங்கள் வீட்டின் அருகே வாகனங்கள் மிக மெதுவாக செல்ல வேண்டும் என்று நினைத்து வேகத்தடை போட வைக்கிறார்கள் சிலர். ஆனால் அந்த வேகத்தடைகள் பல வாகன ஓட்டிகளுக்கு எமனாக மாறுகின்றன. திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

10 ஆண்டுகளுக்கு பின் பிறந்த குழந்தைகள்
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில்-தாராபுரம் சாலையில் 42 வயதாகும் ரமேஷ் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் தங்க நகை ஆபரணங்கள் செய்யும் வேலை செய்து வந்தார். மேலும், வெள்ளகோவில் விஸ்வகர்மா ஆபரண தொழிலாளர் சங்க துணை செயலாளராகவும் இருந்து வந்தார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி (35). இவர்களுக்குத் திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் குழந்தை இல்லாத நிலையில் தற்போது 1 ½ வயதில் கிரிஷிக், கிரிக்கா என இரட்டை குழந்தைகள் இருக்கிறார்கள்.
தடுமாறிய வாகனம்
நேற்று முன்தினம் இரவு கடைவீதிக்கு ரமேஷ் சென்று விட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பினார். வெள்ளகோவில்-தாராபுரம் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தார். அப்போது அங்குப் புதியதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் நிலைதடுமாறி ஸ்கூட்டருடன் தவறி கீழே விழுந்தார். உடனே, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரமேஷ் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த, புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய வேகத்தடை
இந்த புதிய வேகத்தடை இருப்பது குறித்து அருகில் முறையான அறிவிப்பு எதுவும் வைக்கப்படவில்லை. மேலும் வேகத்தடை மிகவும் உயரமாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே வேகத்தடை இருப்பது குறித்து அறிவிப்பு பலகை, வெள்ளை நிறக்கோடு வரைய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
காங்கேயம்
இதனிடையே திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் புளியமரத்தில் ஸ்கூட்டர் மோதியதால் அரிசி ஆலை அதிபர் உயிருடன் இல்லை. அந்த விபத்து பற்றியும் பார்ப்போம். ஈரோடு மாவட்டம், வெள்ளோடு, நல்லதொழுவு பகுதியைச் சேர்ந்த 65 வயதாகும் குமாரசாமி என்பவர் அந்த பகுதியில் அரிசி ஆலை ஒன்றை நடத்தி வரும் உரிமையாளர் ஆவார்.
அரிசி ஆலை அதிபர்
அரிசி ஆலை அதிபர் குமாரசாமி நேற்று காலை , திருப்பூர் மாவட்டம் காங்கயத்திற்கு ஸ்கூட்டரில் வந்தார். இவரது இருசக்கர வாகனம், நத்தக்கடையூர்-காங்கயம் ரோட்டில் நாட்டார்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், படுகாயம் அடைந்த அரிசி ஆலை அதிபர் குமாரசாமியை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமாரசாமியைப் பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
